இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக உள்ளது. ஆனால், அறிகுறிகளற்ற வைரஸ் தொற்றாக உள்ளதால் முறையாக சோதனை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பலர் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியாமலேயே பொது வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
இதனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் சோதனைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதிகளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுமே தற்போது கொரோனா வைரஸுக்கான பரிசோதனைகளை முடுக்கிவிடத் தொடங்கி இருக்கின்றன
மேலும், மாநிலங்களில் தினந்தோறும் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை தத்தம் அரசுகள் காலை அல்லது மாலை ஆகிய வேளைகளில் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்புகளை வழங்கி வருகின்றன. மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினந்தோறும் காலை வேளையில் தேசிய அளவிலான பாதிப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்களை அளித்து வருகிறது.
இந்நிலையில், தி இந்து நாளிதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தரவு ஆய்வில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொடர்பாக பாதிப்பு, இறப்பு, மாதிரி முடிவுகள், நோயாளிகளின் தரவுகள், மாவட்ட வாரியான விவரங்கள், வெளி மாநில மற்றும் நாடுகளில் இருந்து வந்த கொரோனா பாதிப்புகள் என அனைத்தையும் தினந்தோறும் அறிக்கையாக சமர்பித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை தவிர மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மேற்குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தையும் சரிவர வழங்குவதில்லை என குறிப்பிட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு ஊடக அறிக்கைகளையும் அம்மாநில பாஜக அரசு வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது.
இதன் மூலம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, மாநிலத்தில் நிலவும் கொரோனா பாதிப்புகளை அப்பட்டமாக ஊடகத்துக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே உத்தர பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைகள் ஏதும் எடுக்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றன.
வெளி மாநிலங்களில் இருந்து வந்த பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களுக்கு முறையான கொரோனா பரிசோதனையே மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைவாகவே இருக்கிறது எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இதுவரையில், 19 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 596 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.