தமிழ்நாடு

“பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” - ஊர் பெயர் மாற்ற அரசாணையை திரும்பப் பெற்றது அ.தி.மு.க அரசு!

ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைத் தமிழக அரசே திரும்பப் பெற்றுள்ளது.

“பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” - ஊர் பெயர் மாற்ற அரசாணையை திரும்பப் பெற்றது அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றங்களைச் செய்து சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு ஊர்ப் பெயர்கள் தவறான உச்சரிப்போடு இடம்பெற்றிருந்தன.

உதாரணமாக, ‘வேலூர்’ ஆங்கிலத்தில் Veeloor என மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஊர்ப் பெயர்களின் தவறான உச்சரிப்பு கொண்ட பெயர் மாற்றம் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கேலிக்கு உள்ளானது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஊர்ப்பெயரை மாற்றும் அரசாணை தேவையா என்றும் விமர்சங்கள் எழுந்தன.

மேலும், தமிழில் உள்ள ஊர் பெயர்களே இன்னும் சரியான முறையில் பயன்படுத்தப்படாத நிலையில் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரியாகச் சோதிக்காமல் அவசர அவசரமாக அரசாணையை வெளியிட்டு இப்போது திரும்பப் பெறுவது ஏன் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை போதாமைகளை மறைக்க மக்களை திசைதிருப்புவதா எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு.

முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா? எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது!” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories