கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்தவர்கள் 36 பேர் நீங்கலாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே 1,649 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வெறும் 12 ஆயிரத்து 421 பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஆயிரத்து 91 ஆண்களும், 594 பெண்களும் இன்று வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல, தனியார் மருத்துவமனையில் 6 மற்றும் அரசு மருத்துவமனையில் 15 பேர் என ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 20 பேர் ஆவர். மாநிலத்திலேயே மொத்த பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே ஆயிரத்து 242 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக உள்ளது.
இன்று 798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் 18 ஆயிரத்து 325 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 279 ஆக உள்ளது.
12 வயதுக்குட்பட்டவர்கள் 1,839 பேரும், 13-60 வயதுக்குட்பட்டவர்கள் 29 ஆயிரத்து 260 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 3,815 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து மாநில அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.