தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் பலி? - மரணத்தை சுற்றும் சர்ச்சை

கொரோனாவால் உயிரிழந்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை செவிலியருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் பலி? - மரணத்தை சுற்றும் சர்ச்சை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு 18 ஆயிரத்துக்கும் மேலான பாதிப்புகளை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். அதில், சென்னையில் மட்டுமே 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலி எண்ணிக்கை சென்னையில் மட்டும் 100ஐ நெருங்கும் நிலையில், நாளுக்கு நாள் 500க்கும் அதிகமான பாதிப்புகளை சென்னை அடைந்து வருகிறது.

இப்படி இருக்கையில், தற்போது அறிகுறிகளே இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்படுவதால், மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை காரணம் காட்டி சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளமட்டும் அனுமதித்து வருவதால், ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டான்லி, ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளிலேயே அதிகபடியான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில், கொரோனா நோயாளிகளுக்காக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கும் தொற்று ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் பலி? - மரணத்தை சுற்றும் சர்ச்சை

அவர்களுக்கான உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்கப்படமால் இருப்பதும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த நங்கநல்லூரைச் சேர்ந்த ஜோன் மேரி பிரிசில்லா (58) என்பவர் நேற்றிரவு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என செய்தி வெளியானது, வைரஸ் பாதிப்பு குறித்த அரசின் அலட்சிய நடவடிக்கை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுகளில் தலைமை செவிலியர் பணியாற்றவில்லை என்றாலும், இதர செவிலியர்களின் பணிகளிலேயே பிரிசில்லா ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், கடந்த 26ம் தேதியன்று, தலைமை செவிலியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள 3வது தளத்திலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேற்படி, தலைமை செவிலியரின் உடல்நிலையும் மோசமானதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பிரிசில்லா உயிரிழந்தது மருத்துவர்கள் மற்றும் பிற செவிலியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் பலி? - மரணத்தை சுற்றும் சர்ச்சை

கடந்த மார்ச் மாதமே ஓய்வுபெறவேண்டிய நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது பணிகாலம் 2 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மே 31ம் தேதி தலைமை செவிலியர் பிரிசில்லா ஓய்வுபெற இருந்த நிலையில், நேற்று கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்.

ஆனால், மருத்துவமனை முதல்வரோ உயிரிழந்த தலைமை செவிலியர் பிரிசில்லாவுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறியிருக்கிறார். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சமயத்தில் அரசு இவ்வாறு உண்மைகளை மறைத்து மருத்துவ பணியாளர்களின் நலனையும், பாதுகாப்பையும் காற்றில் பறக்க விடுவது எந்த வகையிலும் நியாமற்றது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். வெளிப்படைத் தன்மையுடன் அரசும், மருத்துவமனை நிர்வாகங்களும் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories