தமிழ்நாடு

“நாள் ஒன்றுக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே” - நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் வாரத்தின் ஏழு நாட்களும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு அறிவுறுத்தலைத் தொடர்ந்து மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த மே 7 ஆம் தேதி, சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மதுபானக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மதுபானக் கடைகளை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

ஆனால், நீதிமன்ற நிபந்தனைகளை அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மே 8 ஆம் தேதி உத்தரவிட்டது.

“நாள் ஒன்றுக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே” - நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்!

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க, சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் வாரத்தின் ஏழு நாட்களும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு கடை ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மது வாங்க வருபவர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் தந்து மது வகைகளை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கன்களை கொண்டவர்கள் குறிப்பிட்ட நாளில் மதுவை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories