தமிழ்நாடு

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

சமூக விலகலை கடைபிடிக்கவேண்டிய சமயத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து கொரோனா தொற்று பரவுவதற்கு காரணாமாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர் நிறுவனத்திலிருந்து ஸ்டைரீன் வாயு வெளியேறியதால் பாதிப்பு ஏற்பட்டு 11பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், பாலிமர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. விசாகப்பட்டினம் விபத்து தமிழகத்திற்கு சொல்லும் பாடம் என்ன என்பதனை ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“நேற்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர் நிறுவனத்திலிருந்து ஸ்டைரீன் வாயு வெளியேறியதால் இதுவரை 11பேர் உயிரிழந்து உள்ளனர், 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கவலையோடு தெரிவிக்கிறார்கள் அந்த பகுதியில் வாழக்கூடியவர்கள். பல கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால் இன்னும் அதிகமான மக்கள், அதாவது 5 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்னர்.

ஸ்டைரீன் என்ன ?

ஸ்டைரீன் என்கிற கரிம கலவை (organic compound), பாலிமர், நெகிழி (Plastics) மற்றும் பிசின்கள் (resins) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டைரீன், ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது "ஸ்டைரீன் டை ஆக்சைடாக" பிறழ்ந்து மிகவும் சக்திவாய்ந்த நச்சாக மாறும்.

நச்சுத்தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கையாள்வதற்கான விதிகள், 1989இன் கீழ் ஸ்டைரீன், நச்சு மற்றும் அபாயகரமான (hazadarous) இரசாயனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைரீன் வாயுவை சிறிது நேரம் சுவாசித்தாலே கண் எரிச்சல், குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக அளவில் அல்லது அதிக நேரம் சுவாசித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை போகுமென்றும், புற்றுநோய் உள்ளீட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டைரீன் மட்டும் அப்படியே இருந்ததா அல்லது வேறு ஏதாவது வேதியல் கலவைகளுடன் இருந்ததா என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

எப்படி நடந்தது இந்த விபத்து?

"நெகிழ்வுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக்ஸ்" (expandable plastics) உற்பத்தி செய்வதற்கான இந்த ஆலையில் ஸ்டைரீன் மோனோமெர் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டைரீன் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் 17டிகிரிCக்கும் குறைவான வெப்பத்தில் பாதுகாக்கப்படவேண்டும் என்கின்றன விதிகள். பரவிவரும் கொரோனா தொற்றால், எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் உற்பத்தி நடைபெறவில்லை, அட்டவணைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்றுவந்தன.

சரியான வெப்பநிலையில் ஸ்டைரீன் வாயு சேமித்து வைக்கப்படாததால் கசிவு ஏற்பட்டுள்ளது. இது அந்த சேமிப்பு தொட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வால்வு உடைந்து வாயு வெளியேறி விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டைரீன் வாயுவை சேமித்து வைத்திருந்த தொட்டிகள் பழையதும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்தவை. பராமரிப்பு சரியாக இல்லாத காரணத்தால் மூன்று டன் ஸ்டைரீன் வாயு கசிந்து, 5 கி.மீ சுற்றளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக அந்த சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்டிருந்த அரிப்புக்களை (corrosion) ஆலை நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்கிறது டெல்லியை சேர்ந்த "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்". இப்படி வைக்கப்பட்டுள்ள வாயுக்களின் சேமிப்பு தொட்டிகளில் பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகள் இருக்கும், அதையும் தாண்டி ஏற்பட்டுள்ள இந்த விபத்து அந்த ஆலையில் இருந்த கட்டமைப்புகளின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த ஆலையில் இருந்த மற்றொரு பிரச்சனை, இதைப்போன்ற நிலையற்ற கலவைகளை (volatile compounds) கண்டறியக்கூடிய கட்டமைப்புகளில் உள்ள போதாமைகள், குறிப்பாக ஸ்டைரீன் வாயு வெளியேறுவதை கண்டறியக்கூடிய தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை.

இதைப்போன்ற அபாயகரமான வேதியல் பொருட்களை கையாள கடுமையான விதிகள் உள்ளன, குறிப்பாக ஆலைகள் மூடப்பட்டு திறக்கப்படுவதற்கு முன்னர் எந்த மாதிரியான பராமரிப்பு பணிகள் நடைபெறவேண்டும் என்றும், எப்படி படிப்படியாக உற்பத்தியை துவக்க வேண்டும் போன்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றை ஆலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை என்று தெரியவருகிறது.

இந்த ஆலையின் மொத்த நிலப்பரப்பு, குடியிருப்பு பகுதிகள் உட்பட சுமார் 600 ஏக்கர்கள் இருக்கும். அருகில் குடியிருப்பு பகுதிகளான ராஜரத்தின வெங்கடாபுரம், அசோக் நகர் மற்றும் பத்மநாபுரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் இளைஞர்களும், காவல் துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் துரிதமாக செயல்படாமல் போயிருந்தால் இழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

வரலாற்று முகம்:

ஸ்டைரீன் பாலிமருக்கு இரு கோர முகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த ஜெயராமன். இந்த பாலிமரை முதன்முதலாக உற்பத்தி செய்தது IG பார்பேன் என்கிற நிறுவனம். ஜெர்மனியில் நாஜிக்கள் அமைத்த வதை முகாம்களில் பல லட்சக்கணக்கான யூதர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட "ஸ்ய்க்ளோன்-பி" வாயுயை உற்பத்தி செய்தது இந்த பார்பேன் நிறுவனம்தான்.

1944 ஆம் ஆண்டு, ஏஜென்ட் ஆரஞ்சு மற்றும் நாபாம் தயாரித்த டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம்தான் இப்போது பாலிஸ்டைரீன் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. டவ் கெமிக்கல்ஸ், போபால் விஷவாயு விபத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விபத்துகள் சொல்லும் பாடம் என்ன, குறிப்பாக தமிழகத்திற்கு?

தமிழகத்தில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், பாலிமர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன, அதிகமாக, மணலி, கடலூர், தூத்துக்குடி, பெருந்துறை, நாகப்பட்டினம் மற்றும் இன்னும் சில ஊர்களில் இவை செயல்படுகின்றன.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

1. கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கவேண்டிய சமயத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து கொரோனா தொற்று பரவுவதற்கு காரணாமாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. இரட்டை பேரிடர்களை ஒரே நேரத்தில் சந்திப்பது சவால் நிறைந்தது.

2. தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயன தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உறுதிசெய்வதற்கான பணிகளை துவங்கவேண்டும். அப்பணிகள் முடிவடையும் வரை உற்பத்தியை துவக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

3. அனைத்து நிறுவனங்களிலும் உள்ள அளவீட்டு கருவிகள் அனைத்தும் "மறு அளவுத்திருத்தம்" (calibration) செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

4. ரசாயன தொழிற்சாலைகளின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக, "பேரிடர் பயிற்சிகளை நடத்தவேண்டும்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

5. MSDS என்று சொல்லக்கூடிய மாஸ்டர் டேட்டா ஷீட் எப்போதும் பூர்த்திசெய்யப்பட்டு, அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

6. மேலை நாடுகளில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

7. சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை பின்பற்றுகின்றனவா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும். எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை சரிசெய்யும்வரை ஆலைகளை செயல்பட அனுமதிக்கக்கூடாது

8. ரசாயன தொழிற்சாலைகளை ஒரே இடத்தில குவித்து அமைக்க அனுமதிக்க கூடாது. சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு அல்லது திரவம் இன்னொரு தொழிற்சாலையில் உள்ள வாயுவிற்கு எரிபொருளாக மாறலாம், அதனால் கடுமையான பாதிப்புகள் நிகழும்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

9. இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்கின்றனவா என்பதை சுதந்திரமான அறிஞர்களை கொண்டு தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

10. மேற்குலக நாடுகள் இதைப்போன்ற தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாடுகளில் அமைத்து உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, சூழலின் முக்கியத்துவத்தை அந்நாடுகள் எவ்வாறு உணர்த்துள்ளன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேல் அதிக அளவில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.

11. தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயன தொழிற்சாலைகளும் அனுமதிவாங்கப்பட்ட வேதியல் கலவைகளைத்தான் உற்பத்தி செய்கின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.

12. கடலூரில் பெட்ரோலிய கெமிக்கல் ஆலையை அமைக்க ஹல்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், நாகையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதையும் கைவிடவேண்டும்.

“விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து - பாடம் கற்குமா தமிழகம்?” : பூவுலகின் நண்பர்கள் சொல்லும் 14 அம்சங்கள்!

13. சூழலில் ஏற்பட்ட சீர்கேடுகளும், சூழல் சங்கிலியில் ஏற்பட்ட விரிசல்களும்தான் கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாக காரணமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பின்னணியில் சூழலை சீர்கெடுக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது.

14. இதைப்போன்ற ரசாயன தொழிற்சாலைகள் ஏற்படுத்துகின்ற சூழல் சீர்கேடுகள், மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் "பயோ பிளாஸ்டிக்ஸ்" ஆய்வுகளை, உற்பத்தியை, மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன, நாமும் அதை நோக்கியே பயணப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories