தமிழ்நாடு

“எனக்கு கொரோனா தொற்று இல்லை; ஆனால் பாகுபாடு காட்டுகிறார்கள்”-தனிமைப்படுத்தப்பட்ட தமிழக விமானி வேண்டுகோள்!

சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்களின் வீட்டின் முன் “கொரோனா தொற்று; உள்ளே நுழையாதே” என்ற வாசக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

“எனக்கு கொரோனா தொற்று இல்லை; ஆனால் பாகுபாடு காட்டுகிறார்கள்”-தனிமைப்படுத்தப்பட்ட தமிழக விமானி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தமிழகம் வந்துள்ள அனைவரையும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தோராயமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் வகையில் அவர்களது இடது கையில் கொரோனா தனிமைப்படுத்தல் தொடர்பான முத்திரைகளும், சம்மந்தப்பட்டவர்களின் வீட்டு வாயிலில் “கொரோனா தொற்று , உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என நோட்டீஸ் ஒட்டப்பட்டும் வருகிறது.

“எனக்கு கொரோனா தொற்று இல்லை; ஆனால் பாகுபாடு காட்டுகிறார்கள்”-தனிமைப்படுத்தப்பட்ட தமிழக விமானி வேண்டுகோள்!

இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கும் பலர் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டு வருகின்றனர். அவர்களிடையே சுகாதாரத்துறையின் இந்த நோட்டீஸ் ஒருவகையான மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விருதுநகரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்ற விமானி ஒருவர் மிகவும் வேதனையுடனும், அதிருப்தியுடனும் ட்விட்டரில் கொரோனா நோட்டீஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், “உள்நாட்டில் நான் மேற்கொண்ட பயண விவரத்தை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட நிர்வகத்தினர் என்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோரியிருந்தனர். ஆனால் அரசு அதிகாரிகளால் ஒட்டப்பட்டுள்ள இந்த கொரோனா நோட்டீஸால் என் குடும்பத்தினர் மிகவும் பாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சமூக அளவில் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். எங்களை எப்படி காப்பாற்றுவீர்கள்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னை, கொச்சி, பெங்களூரு என அனைத்து விமான நிலையங்களிலும் நான் தெர்மல் பரிசோதனைக்கு உட்பட்டேன். அதில் எனக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க தனிமைப்படுத்திக் கொண்டேன்.

ஆனால், அரசு அதிகாரிகள் ஒட்டியுள்ள போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது போன்று எனக்கு எந்த நோய்த்தொற்றும் இதுவரை இல்லை. அப்படி இருக்கையில், சமூகத்தில் உள்ளவர்களை எங்கள் குடும்பத்தினரை புறக்கணிப்பதையும், பாகுபாடு காட்டுவதையும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என விமானி மோகன்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, வியட்நாமில் இருந்து வந்த ஆனந்த் குமார் என்ற செய்தியாளரின் வீட்டிலும், இதேபோல நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவே கருதியுள்ளனர். அது தொடர்பாக ஆனந்த் குமாரும் தன்னுடைய ஃபேஸ்புக்கில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

banner

Related Stories

Related Stories