இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள், அல்லது சுற்றுலா பயணிகள் யாராக இருந்தாலும் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சிலர் சுயமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அரசின் உத்தரவின் பேரில் பலர் வீட்டுச் சிறையில் உள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று, வெளியேச் சென்றால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதை குறிக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள் சார்பில் நோட்டீஸும் ஒட்டப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபரால் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இலங்கையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மணிகண்டன் என்ற வயது இளைஞர் கொரோனா அச்சம் காரணமாக ஊர் திரும்பியுள்ளார். அறிகுறிகள் ஏதும் இல்லாதால் வீட்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே வந்த தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபர், சாலையோரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தில் ஆழமாக கடித்திருக்கிறார். இதனால் அலறிய மூதாட்டியின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்பகுதி மக்களையும் தாக்கியிருக்கிறார் மணிகண்டன்.
இதனையடுத்து அவரது கை, கால்களை கட்டிப்போட்ட மக்கள், அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்ட அச்சு இருப்பதை கண்டு கொரோனா கண்காணிப்பில் இருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மணிகண்டன் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே மணிகண்டனால் தாக்கப்பட்ட மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். விசாரணையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் மணிகண்டன் மன உளைச்சலுக்கு ஆளாகி இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கோ அல்லது கொரோனா ஏற்படும் பயத்தை போக்க சுகாதாரத் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.