தமிழ்நாடு

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

அ.தி.மு.க அரசின் அறிவிப்பு டெல்டா மாவட்ட வேளாண்குடி மக்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருமா?

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரி டெல்டா பகுதிகளை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக அரசு. இனி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் காக்கப்படும், விவசாயம் செழித்து வளரும், விவசாயிகள் நலன் பெருகும் இப்படியெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். ஆனால், உண்மை என்ன? இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட வேளாண்மைக்கு முழுமையான பாதுகாப்பைத் தருமா?

டெல்டா மாவட்ட மக்களின் முதல் பிரச்னை எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டத்தை ஆளுநர் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அதில், Schedule 2ல் எந்தெந்த நடவடிக்கைகள் இந்த டெல்டா பகுதியில் தடை செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் புதிதாக பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கவோ, ஆய்வு செய்யவோ, எண்ணெய்க் கிணறு தோண்டவோ, அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிட்டுள்ளது. கூடவே இந்த schedule 2-ல் தடை செய்யப்பட்ட தொழில்களை அரசு விருப்பப்பட்டால் நீக்கவும் சேர்க்கவும் முடியும் எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், அரசு நினைத்தால் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியும். என்றால், புதிதாக எந்த நாசகார திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் எனச் சொல்லும் வாக்குறுதி உறுதித் தன்மையற்றது.

அ.தி.மு.க அரசு சொல்வது போல, புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்படாது என்றால், ஏற்கெனவே இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் என்னவாகும் எனக் கேள்வி எழுகிறது.

அரசிதழில், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்?

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 768 எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன. கடந்தாண்டு கூடுதலாக 489 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஆய்வு செய்ய ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த அனுமதியில நிலப்பகுதி மட்டும் இல்லாமல் கடலுக்குள்ளும் ஆய்வு செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது செயல்படும் அனைத்துக் கிணறுகளும் ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான் என அறிவித்திருக்கிறார்கள். அதாவது, ஆயுள் முடிந்த எண்ணெய்க் கிணறுகள் கூட ஹைட்ரோகார்பன் எடுக்கப் பயன்படுத்த முடியும். ஆக, டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1,200 இடங்களில் ஹைட்ரோகார்பன் வகைகளான மீத்தேன், ஷெல் கேஸ், எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கப்போகின்றன.

விவசாய நிலத்தை இந்த நாசகார திட்டங்கள் அழிப்பதாகக் குற்றம்சாட்டி அவற்றை தடை செய்யும் விதமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என டெல்டா மக்கள் போராடினார்கள். செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை தடை செய்யாமல், சட்டம் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்தச் சட்டத்தால் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா ஆகப்போவது இல்லை.

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

டெல்டாவில் எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கெயில், ஐ.ஓ.சி, பாரத் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள், எரிவாயுவை, குழாய் மூலமாக துறைமுகத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தக் குழாய்களும் விவசாய விளைநிலங்கள் வழியாகத்தான் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே, இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதங்களால், விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். இதனால் பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்த குழாய்களை நீக்கும் எந்த அம்சமும் அந்தச் சட்டத்தில் இல்ல.

அடுத்த விஷயம், மணல் கொள்ளை. அபரிமிதமான மணல் கொள்ளையால் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. தமிழக மணல் தேவையில் 60% டெல்டாவில் இருந்து சுரண்டப்படுகிறது. வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டும் போதாது, மணல் கொள்ளையையும் தடுக்கவேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

அதுபோக, மீத்தேன் உள்ளிட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் டெல்டாவில் இடமில்லை என அரசு அறிவிக்கிறது. எனில், அவையெல்லாம் நாசகார திட்டங்கள் என்பதை அரசு ஒப்புக்கொள்வதாகத்தானே பொருள். அந்த திட்டங்களை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்குவதுதானே முறை. அதைச் செய்வாரா நம் முதலமைச்சர்? அதுபற்றிய அறிவிப்பும் இல்லையே?

ரியல் எஸ்டேட் வரைமுறை என்ன, மனை விற்பனையை எப்படி ஒழுங்குபடுத்தப் போகிறார்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யப் போகிறார்கள் என எந்தத் திட்டமும் இல்லாமல் அவசர கதியில் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது எடப்பாடி அரசு.

எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹைட்ரோகார்பன் எடுக்க நடத்தும் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்தும் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசுக்கு பரிந்துரைத்த தமிழக அரசு, இத்தனை வருடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளை அடித்து சிறையில் தள்ளிய அரசு, தன்னை விவசாயி எனச் சொல்லிகொண்டு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், விவசாய நிலங்களைப் பறித்து சென்னை - சேலம் 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் எனச் சபதம் போட்ட முதலமைச்சர் நடத்தும் ஒரு அரசுக்கு, திடீரென காவிரி டெல்டா விவசாயிகள் மேல் ஏன் இத்தனை அக்கறை?

எல்லாவற்றிற்கும் காரணம் வாக்கரசியல். உள்ளாட்சித் தேர்தலில், டெல்டா மாவட்டங்களில் மக்களின் கடும் எதிர்ப்பையே சம்பாதித்தது அ.தி.முக. கூடியவிரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தச் சரிவு எடப்பாடி பழனிசாமியை அச்சப்பட வைத்திருக்கிறது. அதன் விளைவே இந்த அறிவிப்பு.

அ.தி.மு.க அரசு வாக்கரசியலுக்காகச் செய்தாலும் பரவாயில்லை; மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என எதிர்க்கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ‘வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்றாலும், அது ஒரு அரைகுறை சட்டம் என்பதும், அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும் துக்கம் கரையப்போவதில்லை என்பதுதான் உண்மை.

banner

Related Stories

Related Stories