தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : சட்டமுன்வடிவு மசோதா கொண்டுவர சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

file image
file image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“காவிரி டெல்டா பகுதி, உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டுமானால், புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுப்பதுடன், பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்” என தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதன் விவரம் வருமாறு:

“காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கடந்த 9ம் தேதி அறிவித்திருக்கிறார். அப்போது, புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதுமட்டுமின்றி பிப்ரவரி 10 அன்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திலும், அதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், ஏற்கனவே அறிவித்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்தால்தான் பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சாலச் சிறந்ததாக அமைந்திட முடியும். இதுகுறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அப்படிக் கேள்வி எழுப்பிய நேரத்தில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் அவர்களும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : சட்டமுன்வடிவு மசோதா கொண்டுவர சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஆகவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து, இனிமேல் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையில், ஒரு சட்டமுன்வடிவை இதுவரை ஏன் கொண்டுவராமல் இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. எனவே மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஜனவரி 16 அன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் பொதுமக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் பிப்ரவரி 10 அன்று ஒரு கடிதத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து இருக்கிறார். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்டமுன்வடிவை மசோதாவாக, தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஏன் என்றால் சட்டமன்ற இன்றும், நாளையும்தான் நடைபெற உள்ளது. அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நிச்சயமாக, உறுதியாக திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு முழு அளவு ஆதரவுதரத் தயாராக இருக்கிறது. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் எங்களுடைய தி.மு.க உறுப்பினர்கள் நிச்சயமாக இதுகுறித்து வலியுறுத்தி, வற்புறுத்தி, உறுதியாகப் பேசுவார்கள். எனவே அந்த வகையில் இந்தப் பிரச்னையை நான் முதலமைச்சரின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் தங்கள் வாயிலாகக் கொண்டு வந்து அமர்கிறேன்.

(குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். 2 நாட்கள்தான் சட்டமன்றம் இருக்கிறது. இன்று மாலை கூட அமைச்சரவைக் கூட்டம் இருப்பதாகச் செய்தியைப் பார்த்தோம். எனவே ஒரு நல்ல முடிவு வரும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். இதனை நாங்கள் மட்டுமல்ல, டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதுகுறித்து நேற்றுக் கூட முதலமைச்சர் இதே அவையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று வீராவேசமாக, உணர்ச்சியோடு சொன்னார். அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் பதிவு செய்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.”

இவ்வாறு சட்டப்பேரவையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories