தமிழ்நாடு

“மாநில மொத்த உற்பத்தி குறைந்துபோவதில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என்பதோடு, மாநில மொத்த உற்பத்தி குறைந்து போவதில், “கின்னஸ் சாதனை” நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“மாநில மொத்த உற்பத்தி குறைந்துபோவதில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“புள்ளிவிவரங்கள்” மூலம் “மாயஜாலங்களை” காண்பிப்பதில் நாங்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சிக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க நிதியமைச்சர் முயற்சி செய்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழக பட்ஜெட் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்து, 4.56 லட்சம் கோடி கடனுடன் தன்னுடைய பத்தாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, தமிழகத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியையும், தமிழக மக்களுக்கு கடும் மனக் கலக்கத்தையும் உருவாக்கியிருக்கிறார், இன்று 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள, “தகுதி நீக்க” வழக்கைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க ஆட்சி துவங்கியதில் இருந்து 3.56 லட்சம் கோடி கடனை வாங்கி, நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்துவிட்டார் முதலமைச்சரான பழனிச்சாமி. தொடர்ந்து வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என்பதோடு, மாநில மொத்த உற்பத்தி குறைந்து போவதில், “கின்னஸ் சாதனை” நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு. கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 14 ஆயிரம் கோடி என்றால், இன்று திருத்தப்பட்டது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்து, நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சரின் நிதி மேலாண்மைத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அடுத்த வரும் ஆண்டுகளில் இது இன்னும் உயருவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில், நிதிநிலைமையை விட்டுச் செல்கிறார்கள். “புள்ளிவிவரங்கள்” மூலம் “மாயஜாலங்களை” காண்பிப்பதில் நாங்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சிக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க நிதியமைச்சர் முயற்சி செய்திருக்கிறாரே தவிர உண்மையான நிதி மேலாண்மை தோல்விகளை அவரால் சமாளிக்க முடியாமல் தவித்திருக்கிறார்.

“மாநில மொத்த உற்பத்தி குறைந்துபோவதில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

மத்திய வருவாயிலிருந்து வரவேண்டிய 7,586 கோடி ரூபாயை பறிகொடுத்திருக்கிறார்கள். உள்ளாட்சி நிதி மற்றும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ஆகியவற்றின் மூலம் பெற வேண்டிய 10,447 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து பெற முடியாமலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாமலும், தத்தளித்து நிற்கிறார்கள். ஒரே ஆண்டில் இப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் மாநில நிதியை தாரைவார்த்து விட்டு, "பா.ஜ.க அரசின் மீது ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட்டு விடக்கூடாது" என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து- மாநில நிதி உரிமையை தாரை வார்த்ததை மறைப்பதற்காக நிதியமைச்சரும், அவருக்கு பட்ஜெட் தயாரிக்க “சிறந்த ஆலோசனைகள்” வழங்கிய முதலமைச்சரும் பூசி மெழுகியிருக்கிறார்கள்.

பல்வேறு துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதி போய்ச் சேருகிறதா அல்லது நிதி ஒதுக்குகிறோம் என்று கூறிவிட்டு, பொய் சொல்கிறார்களா என்ற அளவிற்கு மோசமான காட்சிகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்று கண் சிமிட்டுகின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் அத்திக்கடவு அவினாசி குடிநீர்த் திட்டம் அமைந்திருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு, சென்ற நிதி நிலை அறிக்கையில், 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடே 1,652 கோடி என்பதால், சென்ற வருடம் 1000 கோடி ரூபாயை செலவு செய்திருந்தால், இந்நேரம் அத்திட்டம் நிறைவு பெறும் கட்டத்திற்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அத்திட்டம் அடிக்கல் நாட்டி ஒரு வருடத்திற்கு மேலாகியும் முன்னேற்றம் அடையவில்லை; ஆகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டதா? இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

“மாநில மொத்த உற்பத்தி குறைந்துபோவதில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்

இப்படி பல திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் நிலைமை இப்படித்தான் ஏமாற்றுத் திசையில் போய்க் கொண்டு இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு வெளிப்படையான நிதி ஒதுக்கீடு இல்லை. அம்மா உணவகத்தை அரசு தனியார் நிதியை நம்பி, அல்லது அ.தி.மு.கவினர்க்குத் தாரைவார்க்கப் போகிறது. ராமநாதபுரம், விழுப்புரம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை வருடக்கணக்கில் செலவு செய்யாமல் வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது பட்ஜெட் பக்கங்களில் இருந்து தெரியவருகிறது.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதி சேசய்யா குழு அறிக்கையின் அடிப்படையில், அரசு ஊழியர்களைக் குறைக்கும் “உள்நோக்கம்” நிறைய இருப்பதை நிரூபிப்பதைப் போல், “செலவினக் குறைப்பு” குறித்த பட்ஜெட் வாசகங்கள் அமைந்துள்ளன. ஆகவே பத்தாவது பட்ஜெட் மட்டும் அல்ல; இது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள, எந்தத் துறைக்கும், எந்தத் திட்டத்திற்கும் “பற்றாத” பற்றாக்குறை பட்ஜெட் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories