தமிழ்நாடு

“அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா?” : அமைச்சரின் அலட்சிய பதிலுக்கு குவியும் பதிலடிகள்!

செருப்பைக் கழற்றிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன் என அலட்சியமாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

“அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா?” : அமைச்சரின் அலட்சிய பதிலுக்கு குவியும் பதிலடிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கிருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் கோவிலுக்கு அருகில் இருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார். தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்ததோடு அல்லாமல், இந்த செருப்பைக் கழற்றிவிடு எனக் கூறி தனது காலை நீட்டியுள்ளார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது புகைப்படம் எடுக்காதவாறு மறைத்து நின்ற அ.தி.மு.க-வினர் பத்திரிகையாளரை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இருப்பினும் அமைச்சருக்கு பழங்குடியின மாணவர் செருப்பை கழற்றிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வரும் அரசியல் கட்சியினர், அமைச்சர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியைக் கழற்ற சொன்னேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. செருப்பு பக்கிளை கழற்றிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன்” என அலட்சியமாக விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தால் மேலும் கோபமடைந்த இணையதளவாசிகள், “உடல்பருமனால் குனியமுடியவில்லை என்றால் உங்களுக்கு எதற்கு அமைச்சர் பதவி?” என்றும், “பதவிக்காக சசிகலா காலில் விழுந்த நீங்கள் காலணியை கழற்றக் குனிய முடியாதா?” என்றும் சிலர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories