தமிழ்நாடு

"பா.ஜ.கவில் சேர்ந்து 5000 கொடுத்தால் 6 லட்சம் தருவார் மோடி”- கிராம மக்களிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி!

“பா.ஜ.க-வில் சேர்ந்து ரூபாய் 5,000 கொடுத்தால் மோடி அரசு ரூபாய் 6 லட்சம் கொடுக்கும்” என்று சொல்லி முந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களை ஏமாற்றிய பா.ஜ.க நிர்வாகி மீது புகார்.

"பா.ஜ.கவில் சேர்ந்து 5000 கொடுத்தால் 6 லட்சம் தருவார் மோடி”- கிராம மக்களிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்து ரூபாய் 5,000 கொடுத்தால், ரூபாய் 6 லட்சம் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 5 ஆயிரம் செலுத்தினால், 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த கிருஷ்ணகிரி பா.ஜ.க மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க மகளிரணி செயலாளராக உள்ளார். இவரும், இவரது கணவர் தருமனும் இணைந்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பா.ஜ.கவில் உறுப்பினராக சேர்ந்தால், பா.ஜ.க-வுக்கு கட்சி நிதியாக கோடிக்கணக்கில் வரும் கறுப்புப் பணத்தை தலா ரூபாய் 6 லட்சம் என பிரித்து தருவதாக, குரும்பட்டி, காவேரிப்பட்டினம், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி, பெரியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் ஆசை காட்டி, ரூபாய் 5,000 பெற்றுள்ளனர்.

பணம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை அவர் கூறியபடி பணம் தராததால், ஏமாற்றப்பட்ட கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

பா.ஜ.கவில் உறுப்பினராக சேர்ந்தால் பணம் தருவதாகக் கூறி பல வருடங்கள் ஆகியும் அவர் சொன்னபடி பணம் தரவில்லை என்றும், கட்டிய பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கஷ்டப்பட்டு கடன் வாங்கி கொடுக்கப்பட்ட அந்த 5,000 ரூபாயை பெற்றுத் தருவதோடு பல கோடி ரூபாய் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

banner

Related Stories

Related Stories