தமிழ்நாடு

சட்டம் இயற்றப்பட்ட 14 வருடங்களில் முதல் வழக்கு பதிவு : மலக்குழி மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை!

நாட்டிலேயே முதன்முறையாக மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்த தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றப்பட்ட 14 வருடங்களில் முதல் வழக்கு பதிவு : மலக்குழி மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் வணிக வளாக உரிமையாளர் மீது முதன்முறையாக மலக்குழியில் மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள பிரபலமான தனியார் வணிக வளாகம் ஒன்றில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மூலம், அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர். இதில் அருண்குமாரும், ரஞ்சித்குமாரும் சகோதர்கள்.

முறையான உபரகரணம் இன்றி, கழிவுநீர்த் தொட்டியை ரஞ்சித் சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். குழிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் ரஞ்சித் மூச்சுத்திணறி மயக்கமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அருண்குமாரும் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மலக்குழியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகதான் இந்த விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் துப்புரவாளர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அருண்குமார்
அருண்குமார்

அதுமட்டுமின்றி, இதுபோல பணியில் ஈடுபடும்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது காண்ட்ராக்டர் அளிக்கவேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மேலும் இதுகுறித்த வழக்கில், அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட்டால் ஐபிசி 304(1) பிரிவின் கீழ்தான் வழக்குப்பதிவு செய்வார்கள்.

ஆனால் தற்போது தேசிய துப்புரவாளர் ஆணையம் வழிகாட்டிய விதிமுறைகளை மீறியதன் கீழ் கூடுதலாக ஒரு புதிய சட்டத்தின் கீழும் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது அருண்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் சென்னை அண்ணா சாலை போலிஸார் அருண்குமாரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஒப்பந்ததாரர் தண்டபாணி மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2019 -ன் (prohibition of employment as manual scavengers and their rehabilitation Act 2019 r/w ) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர் தண்டபாணி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலிஸார் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது போலிஸார் பதிவு செய்துள்ள இந்தச் சட்டத்தை 1993ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அதனையடுத்து தமிழக அரசு 2005-ம் ஆண்டு இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories