தமிழ்நாடு

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் பிரதான கோரிக்கை குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளார் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டும் காணாமல் தமிழக அரசு மருத்துவர்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்துவதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சாடியிருந்தனர்.

இருப்பினும் பலர் மருத்துவர்களுக்கு என்ன குறை, அவர்கள் ஏன் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற பல பேச்சுகள் பொதுவெளியில் கேட்கப்பட்டு வருகிறது. இவ்வாறான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் விளக்கமளித்துள்ளார்.

அதில், மருத்துவர்களின் போராட்டம் அவர்களின் ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல. தமிழகத்தின் வலிமையான மருத்துவ கட்டமைப்பிற்கு ஆபத்தானதாக இருக்கும் அரசின் சமீபத்திய 2 கொள்கை முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்துவதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

ஒன்று, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பிற்கான 50% இடஒதுக்கீடை நீக்கக் கூடாது. இரண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும்.

50% இடஒதுக்கீட்டை திரும்ப பெறுதல்:

அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு நடைமுறையில் இருந்துவந்த முதுநிலை படிப்பிற்கான 50% இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். இது மருத்துவர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல. மக்களுக்கான கோரிக்கையும் கூட.

ஏனெனில், அடிப்படை மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழகத்தில் உள்ளது. கிராமப்புறத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக முக்கியமானது.

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதேபோல, தொற்றுநோய்களை தடுப்பதிலும் குழந்தைகளுக்கான சத்துணவை மேம்படுத்துவதிலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் வலிமையான அடிதளத்தை ஏற்படுத்துகின்றன.

போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதாலேயெ ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகரிப்பதற்கு காரணம். சில ஆரம்ப சுகாதார மையங்களில் துறைசார்ந்த வல்லுநர்களும் இருக்கிறார்கள். இதற்கு அதி முக்கியமானதாக இருப்பது முதுநிலை படிப்பில் கொடுக்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடுதான்.

இந்த இடஒதுக்கீடு பறிக்கப்பட்டால், அரசு மருத்துவ பணியில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களும் முழுமையாக செயல்பட முடியாமல் போகும். அவை முடங்கினால் கிராமப்புற மக்களுக்கான சுகாதார அமைப்பு இல்லாமல் போகும். மருத்துவத்தின் அடித்தளமே பலவீனப்படும்.

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

நோயாளிகளுக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இருப்பு:

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் நெறிமுறைகளின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைந்தபட்ச மருத்துவர்கள் இருந்தால் போதும் என தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் விளைவாக ஏராளமான பணியிடங்கள் குறைக்கப்பட்டன. 10 மருத்துவர்கள் இருந்த இடத்தில் 2 அல்லது 3 பேரே இருக்கும் நிலைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மாறியுள்ளன.

இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏராளமான நோயாளிகளை கையாளுவதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அறுவைசிகிச்சைக்கு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நம்பியிருக்கும் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை வந்தால் அது ஒட்டுமொத்த பொதுமருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைத்துவிடும். பொதுமருத்துவ கட்டமைப்பின் சீர்குலைவு என்பது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தொடர்புடையது. அதனால் அதற்கு எதிராகவும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

தமிழகத்தின் வலிமையான மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியும், மக்களுக்கான அடிப்படை மருத்துவ உரிமைகளை உறுதி செய்ய வேண்டியுமே அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் இது மக்களுக்கான போராட்டம். ஆகையால் மருத்துவர்களுக்கு ஆதரவாக மக்கள் துணை நிற்கவேண்டும் என மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories