தமிழ்நாடு

“என் முன்னாலேயே, கால் மேல் கால் போட்டு பாட்டு கேட்குறியா..?” - தலித் இளைஞரை வெட்டிய வாலிபர்!

வீட்டு வாசலில் கால் மேல் கால் போட்டு பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த தலித் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என் முன்னாலேயே, கால் மேல் கால் போட்டு பாட்டு கேட்குறியா..?” - தலித் இளைஞரை வெட்டிய வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேனி அருகே வீட்டு வாசலில் கால் மேல் கால் போட்டு பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். அங்கு வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சுந்தர் (23), தனது வீட்டு வாசலில் அமர்ந்து ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

கோழிக்கடை நடத்தி வரும் கண்ணன் (40), மது போதையில் தனது மகன் மனோஜ் உடன் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்றபோது, சுந்தர் கால் மேல் கால் போட்டு பாட்டு கேட்டதைப் பார்த்ததும், வண்டியை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

“என் முன்னாலேயே, கால் மேல் கால் போட்டு பாட்டு கேட்குறியா..?” என்று ஆத்திரத்துடன் பேசிய கண்ணன், தான் வைத்திருந்த கோழி வெட்டும் கத்தியை எடுத்து சுந்தரின் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுந்தரை தாக்கிய கண்ணன் தலைமறைவாகிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனிசெட்டிபட்டி போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். கண்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதிய கொடுமைகள் தமிழகத்தில் இன்னும் ஒடுக்கப்படவில்லை என இத்தகைய நிகழ்வுகள் காட்டுவதாகவும், சுந்தரை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories