தமிழ்நாடு

“அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும்” - வைகோ எச்சரிக்கை!

“மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிக்கும்” - வைகோ எச்சரிக்கை.

“அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும்” - வைகோ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும்” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்களின் கோரிக்கைகளைத் துச்சமாக அலட்சியப்படுத்தி வரும் மோடி அரசு, கடந்த மே மாதம் காவிரிப் படுகை பகுதிகளை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்தது. இதன்படி பிரிவு 1ல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைப்பதற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் மற்றும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மோடி அரசு அனுமதி அளித்தது.

அதன்பின்னர், ஜூலை மாதம் திறந்தவெளி அனுமதி கொள்கையின் கீழ் தமிழகத்தில் நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டங்களில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்திட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூன் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் - மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், கரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

“அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும்” - வைகோ எச்சரிக்கை!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேலும் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் -2, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15, காரைக்காலில் 3, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் என மொத்தம் 20 கிணறுகள் 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திட தற்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருக்கிறது.

காவிரி பாய்ந்தோடும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளை பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்து, பாலைவனம் ஆக்கும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருவதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு கள்ளத்தனமாக துணை போய், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.

banner

Related Stories

Related Stories