தமிழ்நாடு

“பாலைவனமாகும் டெல்டா... ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்கவேண்டும்!” - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

“பாலைவனமாகும் டெல்டா... ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்கவேண்டும்!” - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 20 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே ஆண்டில் 489 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதிகோரி எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.

தமிழகம் மற்றும் புதுவையில் 1984ம் ஆண்டிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1984ம் ஆண்டிலிருந்து இப்போது வரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் OALP கொள்கையின் அடிப்படையில் 2019ம் ஆண்டில் மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமாக 489 எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. வேதாந்தா 274 கிணறுகளுக்கும், ஓ.என்.ஜி.சி. 215 கிணறுகளுக்கும் விண்ணப்பம் செய்துள்ளன.

“பாலைவனமாகும் டெல்டா... ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்கவேண்டும்!” - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாக பொய்த்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயன்று வருவது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில், மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் அப்பகுதியில் நில அமைப்பே கடல் மேற்பரப்பு மட்டத்திற்கு கீழே இறங்கி வருவதாகவும் இதன் காரணமாக நிலப்பகுதியில் கடல் நீர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உட்புகுந்து விட்டதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிவரும் நிலையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது.

“பாலைவனமாகும் டெல்டா... ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்கவேண்டும்!” - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

புதுச்சேரி மாநில முதல்வர், எண்ணெய் நிறுவனங்கள் எதற்கும் ஹைட்ரோகார்பன் எடுக்க தனது மாநிலத்தில் அனுமதி தர முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளோடு போராட்டத்திலும் கலந்துகொண்டார். ஆனால், தமிழகத்தில் இன்று வரை கொள்கை நிலைப்பாட்டை அரசு எடுக்கவில்லை. செய்தியாளர்களிடம் பேசும்போது மட்டும் விவசாயிகள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அண்மையில் சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் தமிழகத்தில் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் எடுத்தால் குற்ற நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்தார். ஆனால், இந்த ஆண்டு மட்டும் 17 கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது, அப்படியானால் இந்த அனுமதியை யார் வழங்கியது? அனுமதியை வழங்கவில்லையென்றால் எப்போது ஓ.என்.ஜி.சி மீது குற்ற நடவடிக்கைகள் பாயும் என்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கவேண்டும்.

இப்படி ஒப்புக்குப் பேசுவதை நிறுத்திவிட்டு, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரிக்க வேண்டுமென்றும், உடனடியாக தமிழக முதல்வர் இத்திட்டங்களுக்கெதிரான கொள்கை முடிவை எடுக்கவேண்டும் எனவும் தமிழகத்தின் எதிர்கட்சிகளை அரசிடம் இதுகுறித்து வலியுறுத்த வேண்டும்” எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுக்கிறது.

banner

Related Stories

Related Stories