தமிழ்நாடு

“ஒலிம்பிக் ஜோதி வெடித்து மாணவன் பலி” - பள்ளி நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டும் பெற்றோர்!

செங்கல்பட்டில், விளையாட்டுப் போட்டியின்போது ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் தீக்காயமடைந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

“ஒலிம்பிக் ஜோதி வெடித்து மாணவன் பலி” - பள்ளி நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டும் பெற்றோர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கிவரும் ராமகிருஷ்ணா மடத்திற்கு சொந்தமான ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. போட்டியின் துவக்கத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து விக்னேஷ் என்ற மாணவன் ஒலிம்பிக் ஜோதியை எடுத்து ஓடி வந்துகொண்டிருந்தபோது அந்த ஜோதியில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து வைக்கப்பட்டிருந்த பகுதி திடீரென வெடித்தது.

இதில் விக்னேஷின் மார்பு மற்றும் முகப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் விக்னேஷ். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பாக விக்னேஷின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கக் கூட இல்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் விக்னேஷின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிவிட்டதாக வதந்தியைக் கிளப்பியிருப்பது, குடும்பத்தினரை மேலும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாக விக்னேஷின் தந்தை முருகன் கூறியுள்ளார்.


உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் போராட்டம் நடைபெறலாம் எனக் கருதிய பள்ளி நிர்வாகம் இன்று முதல் பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. மேலும், பள்ளிக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பள்ளிக்கு வரும் மாணவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை சார்பாக அறிவுறுத்தி வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டி நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஒலிம்பிக் ஜோதி தயார் செய்தது எப்படி என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories