தமிழ்நாடு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு!

திருக்குறளின் சிறப்பை உலகெங்கிலும் கொண்டு செல்ல பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக திருக்குறள் மாநாடு தொடங்கியது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை காமராஜர் அரங்கத்தில் ’பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ சார்பாக திருக்குறள் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறவிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் இம் மாநாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்வில் “திருவள்ளுவர் 2 ஆயிரத்து 50 ஆண்டுகள் - அடைவுகள்” என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் திருக்குறளின் உண்மையான சாராம்சம் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்காக 10 தமிழ் அறிஞர்கள் மூன்று மாத காலம் உழைத்து ஆவணத்தை தயார் செய்ததாகவும் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் சமம் என்று உரக்க முழங்கியவர் திருவள்ளுவர். அவரின் படைப்பான திருக்குறளை உலகெங்கிலும் கொண்டு செல்வதற்கான முயற்சியாக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றிணைந்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் கீழ் இந்த மாநாடு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு!

’மனிதர்கள் சமமல்ல, அனைவரையும் சமமாக ஏற்றுக் கொண்டுவிட முடியாது. மனிதர்கள் சமமானவர்கள் அல்ல, என்று சொல்’ என வேதங்கள் சொல்வதாக உயர்சாதியினர் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தருணத்தில் 2500 வருடங்களுக்கு முன்பே அனைத்து உயிர்களும் சமம் என்று சொன்ன திருவள்ளுவரின் குரலை உயர்த்திப் பிடிப்பது தான் தமிழர்களுடைய வாழ்வியல் நெறி என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

அவர் சொன்னதை நடைமுறைப்படுத்துவதற்கும் 1949ல் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த காலகட்டத்திலேயே ’பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு’ இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு!

இதுவரை 2000 வருடங்களில் திருக்குறள் குறித்து வந்திருந்த அனைத்து ஆவணங்களையும் கட்டுரைகளின் தொகுப்புகளையும் தொகுத்து, ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நூல் இந்த மாநாட்டிலே வெளியிடப்படுகிறது. இந்த ஆவணங்கள் ஒரு மாபெரும் ஒரு ஆய்வு பணியை செய்வதற்கு உரிய அடிப்படை நூலாக அமைந்திருக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இந்த மாநாடு சமய அறிஞர்கள், தத்துவ அறிஞர்கள், நூலாசிரியர்கள், அரசியல் ஆளுமைகள் என்று பல தரப்பை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்த கருத்துக்களை பதிவு செய்யக்கூடிய மாநாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் குடும்பத்தோடு இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்” என அழைப்பு விடுத்துள்ளார் திருமுருகன் காந்தி .

banner

Related Stories

Related Stories