தமிழ்நாடு

யார் ‘ரூட்டு தல’- பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு (வீடியோ)

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பட்டப்பகலில் மாணவர்கள் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின்போது 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

யார் ‘ரூட்டு தல’- பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்ட  கல்லூரி மாணவர்கள்; 7 பேருக்கு அரிவாள் வெட்டு (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது . சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் மாணவர்களிடையே யார் ’ரூட்டு தல’ என்ற பிரச்னையே அதிகம். கடந்த சில நாட்களாக ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் சில மாணவர்கள் ஆயுதங்கள் கொண்டு அராஜகம் செய்வதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம் ஜூலை 23ம் தேதி நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஒரு தரப்பு மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி, அதேக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வசந்த் என்ற மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் பேருந்தில் பயணித்த 7 மாணவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 7 மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த வசந்த் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது கையில் கத்தியை வைத்துக்கொண்டு நடுரோட்டில் அவர்கள் செய்த செயல் பேருந்தில் பயணித்தவர்களையும், பொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தில் பயணித்த பொதுமக்கள் அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கினர்.

இந்தத் தாக்குதல் குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், “இரண்டு பிரிவு மாணவர்களும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அடிக்கடி இந்த பேருந்தில் ’ரூட்டு தல’ நாங்கள் தான் என மோதிக்கொள்வார்கள். அப்படி இன்று ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென பேருந்து நின்றதும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றனர். அப்போது வசந்த் தப்பிக்க முயன்றார், அவரை விரட்டி வெட்டினார்கள். மேலும் 7 மாணவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள், பேருந்தில் இருந்த பொதுமக்கள் சத்தம் எழுப்பியும் அவர்கள் விலகவில்லை”. என அவர் தெரிவித்துள்ளார். பட்டாக் கத்தியை கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories