தமிழ்நாடு

புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் : கள்ளக்குறிச்சிக்கு ஏற்பட்ட நிலைமை தங்களுக்கும் ஏற்படுமோ மக்கள் அச்சம்?

தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் : கள்ளக்குறிச்சிக்கு ஏற்பட்ட நிலைமை தங்களுக்கும் ஏற்படுமோ மக்கள் அச்சம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல, செங்கல்பட்டு, கும்பகோணம் ஆகிய பகுதி மக்களும் தனி மாவட்டமாகப் பிரிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில், தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை நிர்வாக வசதிக்காக தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நெல்லையிலிருந்து பிரிக்கப்படும் தென்காசி மாவட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை, சிவகிரி ஆகிய வட்டாரங்கள் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்டம் என இருந்தது காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாவட்டமாகப் பிரிகிறது செங்கல்பட்டு. புதிதாக அறிவிக்கப்பட்டவற்றையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அந்த முயற்சி அறிவிப்போடு நின்றுவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிப்பதற்கான பணிகளை வருவாய்த் துறை மேற்கொள்ளவில்லை.

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் கள்ளக்குறிச்சியின் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கை.

banner

Related Stories

Related Stories