தமிழ்நாடு

விலையில்லா மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி! (Video)

மதுரை மாவட்டத்தில் இலவச மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்காங்கே அ.தி.மு.க-வினர் மடிக்கணினிகள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கே இன்னும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் பல மாணவர்களுக்கு படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இலவச மடிக்கணினிகள் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஈரோட்டில் மாணவர்கள் இலவச மடிக்கணினிகள் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடித்து விரட்டினர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒருவாரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் அப்படியொரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை புட்டுதோப்பு மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த 75-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அந்த மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மடிக்கணினி வழங்கக்கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

இதனையடுத்து அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை களைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். அங்கிருந்து மாணவர்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது போரட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஒருவரை போலீசார் இழுத்துச் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திடீரென போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மாணவர் சங்க நிர்வாகி இரண்டு பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories