தமிழ்நாடு

மருத்துவ சுகாதாரத்தில் கேரளா முதலிடம் - எப்படி சாதித்தார் பெண் அமைச்சர் சைலஜா டீச்சர்!

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரப் பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன், நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2017-18க்கான சுகாதார பட்டியலை நிதி ஆயோக் நேற்று வெளியிட்டது. இதில், மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும், ஆந்திரா இரண்டாவது இடத்தையும், மாகாராஷ்டிரா 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கேரளா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

கேரள அரசுக்கு இது சாத்தியமாக, டீச்சர் என்று அழைக்கப்படும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பெரும் பங்கினை ஆற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் சுகாதார மேம்பாட்டிற்கு கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக பாராட்டப்படுகிறார்.

மருத்துவ சுகாதாரத்தில் கேரளா முதலிடம் - எப்படி சாதித்தார் பெண் அமைச்சர் சைலஜா டீச்சர்!

அப்படி என்ன செய்தார் சைலஜா டீச்சர்? சமீபத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிபா வைரஸ் பரவல், அமைச்சர் சைலஜாவின் செயல்பாட்டுக்கு ஓர் உதாரணம். நிபா வைரஸ் தாக்குதலால் கடந்த ஆண்டு 18 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு நான்காக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்கவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வைரஸ் தடுப்பதற்கு மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டார் சைலஜா டீச்சர்.

அதிகாரிகளிடம் உத்தரவு வழங்கியதும், தன் வேலை முடிந்தது என்று இல்லாமல், அவர்கள் செய்யும் வேலைகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்பதனை நேரடியாக கேட்டும் தேவையான உதவிகளை உடனே சரி செய்ய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.

உரங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மருத்துவ குழுவுடன் ஆலோசனை, அதிகாரிகளின் நடவடிக்கையை பார்வையிடுவது, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியது, என முழு மூச்சில் செயலாற்றி வந்தார். அதுமட்டுமின்றி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உண்மையான தகவல்களை ஊடங்களுக்கும் மக்களுக்கும் அவ்வப்போது தெரியப்படுத்தினார்.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மாநிலத்தின் எல்லையில் சோதனை சாவடி அமைத்து அண்டை மாநிலங்களுக்கு நோய் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கையயும் கேரள சுகாதாரத்துறை செய்தது. ஊடகங்களிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி நன்மதிப்பை சம்பாதித்தார் சைலஜா டீச்சர்.

மருத்துவ சுகாதாரத்தில் கேரளா முதலிடம் - எப்படி சாதித்தார் பெண் அமைச்சர் சைலஜா டீச்சர்!

மேலும், சமூக வலைதளங்களிலும் விழிப்புடன் இருப்பார் சைலஜா டீச்சர். கேரள மக்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் அவசர உதவிகளுக்கு மக்கள் அவரை நாடுவது உண்டு. தினமும் ஆயிரக்கணக்கான, கோரிக்கைகளும், ஆலோசனைகளும் அவரது சமூக வலைதளப்பக்கங்களில் குவிந்து வருகிறது. அவற்றை முழுவதும் படித்து, முக்கியமான விஷயங்களுக்கு அமைச்சரே பதில் அளிப்பார்.

இதுபோன்ற ஒரு கமெண்டில், ஜியாஸ் மாதசேரி என்ற இளைஞர் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், "எனது சகோதரிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. துர்திஷ்டவசமாக பிறந்த குழந்தைக்கு இதயத்தில் குறைபாடு உள்ளது. அவரை தகுந்து சிகிச்சை வழங்கும் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யவேண்டும்” என அவசரக் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைக் கவனித்த அமைச்சர், "உங்கள் பதிவை கவனித்தோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு குழந்தை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இருதய சிகிச்சை திட்டத்தின் கீழ் குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொச்சியில் உள்ள லிசி மருத்துவமனையில் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சையும் வழங்கப்படும்.” என்று உடனடியாக பதிலளித்தார்.

மேலும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, குழந்தை இருக்கும் மருத்துவமனைக்கே ஆம்புலன்ஸையும் அனுப்பிவைத்தார். இது அனைத்தும் கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடத்திக் காட்டியதில் தான் இருக்கிறது சைலஜா டீச்சரின், அக்கறையும், நிர்வாகத் திறனும். அவர் கூறியபடி அந்த குழந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. எளிய மக்களுக்கும் உயர் தர இலவச சிகிச்சை வழங்குவது அரசின் கடமை என்பதை நிரூபித்துக் காட்டியதற்காக சைலஜா டீச்சர் மக்கள் பெரும் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவில் ஆட்சி செய்யும் இடது முன்னணி பற்றி பல விமர்சனங்களை எழுப்பி வந்தாலும் அங்கு உள்ள முதல்வர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மிகவும் எளிமையாகவே இருக்கிறார்கள். மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அக்கறையுடன் கவனித்து நடவடிக்க எடுப்பது என செயல்பட்டு வருகிறது கேரள அரசு. இப்படிப்பட்ட ஓர் அரசுக்கு, மாநில சுகாதாரத்தில் முதலிடம் பிடிப்பதெல்லாம் சாதனையல்ல. வெறும் கடமையே!

banner

Related Stories

Related Stories