தமிழ்நாடு

தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களும் சனாதனத்துக்கு துணை நின்றார்கள் - திருமாவளவன் எம்.பி

ராஜராஜ சோழன் மட்டுமின்றி தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களுமே சனாதனத்துக்கு, சம்ஸ்கிருதம் வளரவும் துணை போய் உள்ளார்கள் என மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களும் சனாதனத்துக்கு துணை நின்றார்கள் -  திருமாவளவன் எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்மையில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ரஞ்சித்தின் கருத்துக்கு அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “ராஜராஜ சோழன் மட்டுமின்றி தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களுமே சனாதனத்துக்கும், சம்ஸ்கிருதம் வளரவும் துணை போய் உள்ளார்கள். தமிழ் கலாச்சாரம் மெல்ல மெல்ல சிதைந்து போக நமது மூவேந்தர்கள் காரணம். பல்லவர்கள் தான் தமிழை கோவிலில் இருந்து வெளியில் அகற்ற காரணமானவர்கள். சனாதன சக்தி தற்போது மேலோங்கி நிற்பதற்கு நம்மை ஆண்ட மன்னர்கள் தான் காரணம்” என்று அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் தவறாக பதிவிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வி.சி.க மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் கூறினார். இது குறித்து அவர் பேசுகையில் "கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ராதிகா மற்றும் அவரது உறவினர் மகன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் வேதனை அளிக்கிறது. சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் இந்திய அளவில் ஆபாச வலைத்தளங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை வேண்டும் என்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்பு படுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறும் கருத்துகள் ஆதாரமற்றவை. வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியை இதில் இணைத்து பேசி, வன்மத்தை பரப்புகிறார் ராமதாஸ். அதற்கு வி.சி.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இது தொடர்பாக வி.சி.க சார்பில் வழக்கு தொடரப்படும்” என்றார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் விசிக சார்பில் கோரிக்கை வைப்பதாக திருமாவளவன் கூறினார். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை காரணமாக இதில் காலதாமதம் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

வீடு கட்டித் தருவதாக மோடி கொடுத்துள்ள வாக்குறுதி பற்றி பேசிய திருமாவளவன் “2020க்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் வீடு கட்டி தருவது தான் என்னுடைய நோக்கம் என பிரதமர் கூறி இருக்கிறார். கடந்த முறை தேர்தல் அறிக்கையிலும் இதையே தான் அவர் கூறினார். எனவே வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தர ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories