தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தண்ணீர் தேடி வீதிகளில் தவிபதை பார்க்க முடிகிறது. இந்த தண்ணீர் பிரச்சனை தலைநகரையும் விட்டுவைக்கவில்லை. சென்னையின் பல பகுதிகளுக்கு குடிநீர் லாரிகளில் மூலம் வழங்கப்பட்டாலும் மக்களுக்குத் தேவையான தண்ணீர் இன்னும் முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை போக்க, துறைமுகம் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் விழா நேற்று காலை துறைமுகம் தொகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு துறைமுகம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து மக்களுக்கு பிளாஸ்டிக் குடங்களை வழங்கினார்.
துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, தங்கசாலை, ஏழுகிணறு, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு நாள்தோறும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.
தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையை தி.மு.க.,வின் தொகுதி எம்.எல்.ஏ.,வும், நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்விஷயத்தை கையில் எடுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.