தமிழ்நாடு

முகிலனை கண்டுபிடிக்காத தமிழக அரசைக் கண்டித்துப் போராட்டம் : தலைவர்களின் கண்டன உரை!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை இதுவரை கண்டுபிடிக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முகிலனை கண்டுபிடிக்காத தமிழக அரசைக் கண்டித்துப் போராட்டம் : தலைவர்களின் கண்டன உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைத்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திருமதி. பூங்கொடி முகிலன், தி.மு.க சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜி.ராமகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

வேல்முருகன் பேசுகையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுக்கு பிரச்னை இல்லை என்பதால் குளிர்விட்டுப் போய்விட்டது. இனி வரும் பிரச்சனைகளுக்கு நாம் ஒன்றாகப் போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

இயக்குனர் ராஜூமுருகன், முகிலன் காணாமல் போனதென்பது சர்வாதிகார அச்சுறுத்தல். இது போன்ற நிகழ்வு நாளை நமக்கும் நடக்கும் எனவே நாம் அனைவரும் நமக்காகப் போராட முன்வரவேண்டும் என்று கூறினார்.

சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை மற்றும் குறிப்பாக ஸ்டெர்லைட் படுகொலை திட்டமிட்டு தமிழக காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஆதாரத்துடன் தெரிவித்ததற்கு பின்னர் கானாமல் போயிருக்கிறார் முகிலன். 105 நாட்களை தாண்டியபோதும் இன்னும் தமிழக அரசு தேடிக்கொண்டு இருக்கிறது. முகிலன் கண்டுபிடிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றார்.

இயக்குனர் கௌதமன், ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனம் தான் ஹைட்ரோ கார்பன சோதனை நடத்த உள்ளது. இதற்கு தமிழக அரசு துணை நிற்கிறது எனப் பேசினார்.

முகிலனை கண்டுபிடிக்காத தமிழக அரசைக் கண்டித்துப் போராட்டம் : தலைவர்களின் கண்டன உரை!

திருமாவளவன் பேச்சு :

”முகிலன் காணாமல் போய் இதுவரை என்ன ஆனார் என தெரியவில்லை. இதன் பின்னனியில் மணல் கொள்ளையர்களோ, காவல்துறையினரோ, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமோ, மற்ற எதிரிகளோ இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் முகிலனின் போராட்டம் வெளிப்படையானது, முக்கியமானது. ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டை உயரதிகாரிகள் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்தவர் முகிலன்.

அவர் காணாமல்போனது குறித்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்காமல், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அச்சுறுத்தும் வேலையில் தான் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். ஜூன் 6-ம் தேதிக்குள் முகிலனை கொண்டுவந்து நிறுத்தவேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்தார் திருமாவளவன் எம்.பி.

வழக்கறிஞர் கிரிராஜன், மோசமான நிலைக்கு தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டிய இடத்தில் சனாதனம் பேசுபவர்கள் கட்டளைப்படி ஆட்சி நடக்கிறது. இந்த பணியைத் தொடர்ந்தால் அ.தி.மு.க காணாமல் போகும். முகிலனை கண்டுபிடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்கும் இந்த தமிழக அரசு முகிலனை கண்டுபிடித்துக் கொண்டுவரவில்லை என்றால் காலம் மன்னிக்காது என்றார்.

மல்லை சத்யா பேசுகையில், காவல்துறை நினைத்தால் முகிலனை 24 மணி நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தலாம். ஆனால் ஏன் செய்யமுடியாமல் தடுக்கப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. காவல்துறை தோற்றுப்போய் 105 நாட்கள் ஆகிறது.

காவல்துறையினரால் 24 மணிநேரமும் கண்கொத்திப் பாம்பைப் போன்று கண்காணிக்கப்படும் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான முகிலனை காணவில்லை என்றால் எப்படி ஏற்க முடியும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

முகிலனை கண்டுபிடிக்காத தமிழக அரசைக் கண்டித்துப் போராட்டம் : தலைவர்களின் கண்டன உரை!

மகேந்திரன் (சிபிஐ) பேசுகையில், இந்தியாவில் பல இடங்களில் வேதாந்தாவுக்கு இடமளிக்காத நிலையில் தமிழக அரசு தான் பச்சைக் கம்பளம் விரித்துள்ளது. மக்களை திரட்டி அரசாங்கத்தின் சட்டையை பிடித்து கேட்கும் அளவிற்கு பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

பழ.நெடுமாறன், நாட்டில் உள்ள ஒரு குடிமகனுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றால் இது நாடா அல்லது காடா. இது மற்றவர்களுக்கும் நடக்கும் நிலை வரும் என்ற அச்சம் ஏற்படுகிறது. முகிலனை பிரிந்து குடும்பத்தினர் எப்படி வருந்துகின்றனர் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை. எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories