தமிழ்நாடு

தோப்பில் முகம்மது மீரானுக்கு கேரளாவில் புகழஞ்சலி - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

தோப்பில் முகம்மது மீரான் மலையாளத்திலும் தமிழிலும் எழுதினார். மலையாளம் தன் மரியாதையைச் செய்திருக்கிறது. தமிழகம்?

தோப்பில் முகம்மது மீரானுக்கு கேரளாவில் புகழஞ்சலி - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ உள்ளிட்ட சிறப்பான பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதிய, சாஹித்ய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் கடந்த வாரம் காலமானார். தமிழ் இலக்கிய உலகிற்கு சிறப்பான பங்களித்த அவருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டார். தமிழக அரசு அவரது மறைவைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கேரளாவில் தோப்பில் முகம்மது மீரானுக்கு நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் இரு கேரள அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான ஆன்மன் ஒரு பதிவு எழுதியுள்ளார். அது பின்வருமாறு:

“ஒரு சுற்றுலாத்துறை அமைச்சரும், ஒரு உயர்கல்வித்துறை அமைச்சரும் மறைந்த ஒரு எழுத்தாளரின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். நிகழ்வின் புகைப்படம் நேற்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது. இன்று தமிழ் இந்துவில் “பஷீர் மண்ணில் தோப்பிலுக்கு அஞ்சலி” என்கிற தலைப்பிட்டு அதே புகைப்படத்துடன் சிறிய செய்தி வந்துள்ளது.

தோப்பில் முகம்மது மீரானுக்கு கேரளாவில் புகழஞ்சலி - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

பஷீர் மண் என்பது கேரள மண். தோப்பில் தமிழர். அவர் மலையாள இலக்கியத்திற்கு அளித்த பங்கு சிறியது. தமிழுக்கு அப்படியல்ல. ஏராளமான சிறுகதைகளையும், சில நாவல்களையும் தந்துள்ளார். கேரள மண்ணின் பஷீர் எழுதிய பால்யகால சகியையும், உலகப்புகழ்பெற்ற மூக்கையும், சப்தங்களையும், பாத்துமாவின் ஆட்டையும் தமிழுக்கு மொழிபெயர்த்த தோழர் குளச்சல் முகமது யூசுப் “நான் தோப்பிலின் தலைமை வாசகன்” என்கின்றார்.

அய்யா தோப்பிலுக்கு மலையாளத்திலும் தமிழிலும் வாசகர்கள் இருந்தார்கள். அவர் தமிழிலும் எழுதினார், மலையாளத்திலும் எழுதினார். மலையாளம் தன் மரியாதையைச் செய்திருக்கிறது. ஆனால் தமிழில் எழுதிய சாய்வு நாற்காலிக்குத்தான் அவர் சாகித்ய அகாதமி பெற்றார். அவர் நிறைய எழுதினார், நீண்டகாலம் இலக்கியத்தில் பயணித்தார், விருதுகள் பெற்றார். ஆனால் குருபீடமாகத் தன்னை முன்னிறுத்தி சிஷ்யப்பிள்ளைகள் வளையவர இலக்கியச் சண்டித்தனம் செய்யவில்லை. ஒரு தோழர் எழுதியிருந்தார் இத்தனைக்குப் பிறகும் அவர் தன்னை ஒரு மிளகாய் வியாபாரி என்றுதான் சொல்லிக்கொண்டார் என்று!

நிலவுடைமைச் சமூகத்தையும் அதன் உழைப்பற்ற தன்மையையும், ஆண்டசாதிப்பெருமைகளைப்பேசியே நாசமாகிப்போனதையும். பாலியல் இச்சைகளின் முடிவாக நிகழ்ந்த கொலைகளையும் செல்வத்தின் வழி எழுதிய தீர்ப்புகளையும். நெடுகிலும் பேசும் நாவலின் இறுதியில், உழைக்கும் வர்க்கத்தின் நியாயத்தைப் பிரதிபலிப்பார்.

கடற்கரைச் சமூகமான மரைக்கார் சமூகத்தோடு உட்புற கிரமாத்து இஸ்லாமியர்கள் கடைபிடித்த ஏற்றத்தாழ்வை குடியேற்றம் நாவலில் பேசுவார். இப்படி கூனன் தோப்பு, துறைமுகம், ஒரு கடலோர கிராமத்தின் கதை என அவர் தமிழர்களை, அவர்களது கடற்கரை நாகரீகத்தை, அவர்களின் பாடுகளை, இஸ்லாத்தின் பெயரால் நிகழ்கிற மூடப் பழக்கங்களை, எழுச்சியை, வீழ்ச்சியைத் தனது எழுத்தின் வழி பேசிக்கொண்டே இருந்தவர். தலாக் பற்றியும், தலாக் பற்றிப்பேசி மிரட்டும் கணவனுக்கு மனைவி சொல்லும் பதிலாக அவர் எழுதி வந்திருப்பதெல்லாம் அத்தனை நுட்பமானது.

மொட்டைக்கடிதம் என்கிற சிறுகதையில் வரும் பாத்திமாவை அநீதிக்கு எதிரான பழிவாங்கும் பெண்ணாக வைத்திருப்பார். நமது அன்றாடத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அவ்வளவு அழகாக அவரது கண்ணோட்டத்தில் பதிவு செய்திருப்பார். 4000 மதிப்புள்ள ரப்பர் மெத்தைகேட்டு மருமகளைத் தாய்வீட்டிற்குத் துரத்தும் மாமியாரை, அதை வாங்கித்தரத் தவிக்கும் ஏழைத் தகப்பனை அவர் வழி படித்த யாரும் அநீதிக்குத் துணைபோகமாட்டோம்.

தோப்பில் முகம்மது மீரானுக்கு கேரளாவில் புகழஞ்சலி - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

இப்படிப் பரந்துபட்ட படைப்புகளைத் தந்த அய்யா தோப்பில் விடயத்தில் தமிழ்ச்சமூகமும் அமைதியாக இருக்கிறதோ என்கிற குறுகுறுப்பு எனக்குள் மேலிடவே தோழர் ஆளூர் ஷாநவாஸிடம் கேட்டேன் அஞ்சலிக் கூட்டத்திற்கான தயாரிப்பில் இருப்பதாகச் சொன்னார். நானும் இஷாக் தோழரும்கூட ஒரு கூட்டத்திற்கான ஏற்பாட்டைப் பேசிக்கொண்டோம். இதற்கிடையே கவிக்கோ மன்றத்தின் சார்பில் நாளை ஞாயிறு மாலை ஒரு அஞ்சலிக்கூட்டம் இருக்கும் தகவலை மூன்று நாள் முன்னர் அறிந்தேன். ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

போதாது நிறையப் பேசப்படவேண்டிய ஆளுமை அவர். நிறையப் பேசப்படவேண்டிய படைப்புகள் அவருடையது. நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய நூல்கள் அவருடையது. (என் நினைவு சரி என்றால்) 400 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட அவர் படைப்புகள் பற்றிய ஆய்வுநூலையே பேராசிரியர்.மனோகரன் எழுதியிருக்கிறார்.

முதல் பத்திக்கு வருவோம் தோழர் சந்தோஷ் நாராயணன், அய்யா சோ.தர்மன் போன்றோர் இது விடயத்தில், தங்கள் பதிவுகளில் கேரள அமைச்சர்களைப் புகழ்ந்தும் தமிழக அரசின் நிலையை நொந்தும் எழுதியருந்ததைப் பாரத்தேன். பக்கத்தில் புதுச்சேரியில் எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்ததையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு வேளை இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு தோப்பிலைத் தெரியாவிட்டாலும் இந்தப்பதிவை ஒரு சிறு அறிமுகமாக எடுத்துக்கொண்டு நாளை அன்னாருக்கு நடக்கவிருக்கும் அஞ்சலிக்கூட்டத்திற்கு வந்து இரண்டொரு வார்த்தைகள் பேசலாம். இதெல்லாம் நடக்குமா?

இங்கே எழுத்தாளர்களை விரோதிகளாக்கி வைத்திருக்கிறது அரசு. என்ன செய்வது உண்மையைச் சொன்னால் விரோதம்தான் மிஞ்சுகிறது. அய்யா வண்ணதாசனின் வார்த்தைகளில் சொல்வதானால்,

உங்களால் என்ன செய்யமுடியும்
ஒதுக்கித் தள்ளுவீர்கள்
என்னால் என்ன செய்யமுடியும்
ஒதுங்கிக் கொள்வேன்.”

- ஆன்மன், கவிஞர்

இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஆன்மன்.

banner

Related Stories

Related Stories