
டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டிகளிலும் நடைபெறும் பல சுவாரசியமான சம்பவங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 15) நடைபெற்றது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் போது இரு அணிகளின் கேப்டன்களும் டாசின் போது கைகுலுக்கவில்லை. தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஒட்டுமொத்தமாக 40 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதமாக இது பதிவுசெய்யப்பட்டது.

திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஹர்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷிவம் துபே லேசாக அதிரடி காட்டி 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்சர்களுடன் 27 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இந்திய பவுலர்கள் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்து வீசி திணறடித்தார்கள். பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் எடுத்த 44 ரன்களே அதிகபட்ச தனிவீரரின் ரன்னாக இருந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் பும்ரா, பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.
போட்டியின் முடிவில் ஆட்டநாயகனாக இந்திய வீரர் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதுவரை டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய 9 போட்டிகளில் 8 போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்புவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்கும் விதமாக மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பாக பிரம்மாண்டமான எல்இடி (LED) திரை அமைக்கப்பட்டு, நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்ட போட்டியை ஆயிரக்கணக்கான, ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு களித்தனர்.








