64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி 5 நாட்களாக நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் சந்தோஷ், யோகேஷ், ராஜேஷ் ரமேஷ், விஷால் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. இதே பிரிவில் மகளிருக்கு நடைபெற்ற பந்தயத்தில் ஒலிம்பா ஸ்டெஃபி, தீஷிகா, மரியா, வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றது.
ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் தமிழ்நாடு வீரர்கள் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 31 பதக்கங்களுடன், 195 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். 121 புள்ளிகளுடன் ஹரியானா இரண்டாமிடம் பிடித்தது.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும், குழுப்பிரிவில் வழங்கப்படும் சாம்பியன் பட்டத்தையும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளே கைப்பற்றினர். 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் சிறந்த வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.