சென்னை ஓபன் ஏ டி பி செலஞ்சர் 100சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024 தொடர் வரும் 4 ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் SDAT டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், இது குறித்த செய்தியாளர் சந்திப்பு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், தமிழ்நாடு அரசு கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் இதில் பங்கேற்று, போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், சென்னை ஓபன் ஏ டி பி செலஞ்சர் 100 சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024 சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வரும் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் நிலை வீரராக, உலக தரவரிசையில் 117 ஆவது இடத்தில் உள்ள இத்தாலியை சேர்ந்த 20 வயதான லூகா நார்டி இணைந்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று வரை முன்னேறிய, இந்திய வீரர் சுமித் நாகல் உட்பட 14 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். அதே போல தரவரிசை வீரர்களான செக் குடியரசின் ஸ்வர்சினா டாலிபோர் (165), உக்ரைன் வீரர் விட்டலி சக்கோவ் (168), இத்தாலியின் ஸ்டெபோனோ டிரவாக்லியா (196), பெடரிக் கையோ (198) உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர்..
தமிழ்நாட்டில் இருந்து சித்தார்த் விஸ்வகர்மா , மனீஷ் சுரேஷ்குமார், மிகுந்த சசிகுமார் ஆகியோர் வயல்கார்ட் மூலம் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஏடிபி சேலஞ்சர் 100 தொடர்களில் சென்னையில் நடைபெறுவது முதல் போட்டியாகும். அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, டெல்லியில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
பகல் மட்டுமன்றி, மின்னொளியில் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தகுதி சுற்று ஆட்டங்கள் பகலில் நடைபெறும். முதன்மை சுற்று பிப்ரவரி 5-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி ஆட்டம் முடியும் வரை மின்னொளியில் நடைபெறும். பிப்ரவரி 10-ந் தேதி சனிக்கிழமை இரட்டையர் இறுதிப்போட்டியும், பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை ஒற்றையர் இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது. இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.10 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ. 15 லட்சமும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ. 6.30 லட்சமும் வழங்கப்படுகிறது." என்று கூறினார்