விளையாட்டு

முன்னாள் BCCI செயலாளர்களுக்கு அறிவும், பண்பும் இருந்தது.. ஆனால் இப்போது?- இலங்கை முன்னாள் வீரர் விமர்சனம்

பிசிசிஐ உலககோப்பைக்கு முன்னர் ஐசிசி விதிகளை மாற்றினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன் என முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.

முன்னாள் BCCI செயலாளர்களுக்கு அறிவும், பண்பும் இருந்தது.. ஆனால் இப்போது?- இலங்கை முன்னாள் வீரர் விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.

இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.

ஸ்பான்சர் உரிமம், ஒளிபரப்பு உரிமம் என இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை கட்டுப்படுத்தும் பிசிசிஐ கோடியில் வருமானம் ஈட்டத் தொடங்கியது. அதிலும் ஐபிஎல் தொடர் வந்தபின்னர் பிசிசிஐ-யின் வருமானம் அதன் அடுத்த உச்சத்தை தொட்டு ஐசிசி-யையே கட்டுப்படுத்தும் அளவு சென்றது.

முன்னாள் BCCI செயலாளர்களுக்கு அறிவும், பண்பும் இருந்தது.. ஆனால் இப்போது?- இலங்கை முன்னாள் வீரர் விமர்சனம்

அந்த வகையில் தற்போது பிசிசிஐ-யின் அதிகாரத்தால் ஆசிய கோப்பை தொடரின் முக்கால்வாசி போட்டிகள், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமன்றி ஆசியக்கோப்பை போட்டியில் பிசிசிஐ-யின் அழுத்தம் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், பிசிசிஐ உலககோப்பைக்கு மன்னர் ஐசிசி விதிகளை மாற்றினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன் என முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பிசிசிஐ செயலாளராக சரத்பவாரும் டால்மியாவும் இருக்கும்போது அவர்களிடம் அறிவும் பண்பும் இருந்தது. அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினர்.

ஆனால்,இப்போது அது மாறிவிட்டது. பிசிசிஐ தற்போது எதேச்சதிகாரப்போக்குடன் நடந்துவருகிறது. ஆசியக்கோப்பை தொடரில் ஒரு அணிக்கான விதிகளை மாற்றியதை இலங்கை உள்ளிட்ட மற்ற எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கண்டிக்காதது வேதனையளிக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்காக ஆசியக்கோப்பை போட்டிகளில் மாற்றம் செய்ய முடியும் என்றால், இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிக்கு முன் ஐசிசி விதிகளை மாற்றினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஒருவேளை பிசிசிஐ அப்படி செய்தாலும் அதற்கு சரி என்றும் சொல்லும் அமைப்பாக ஐசிசி இருக்கிறது"என விமர்சித்துள்ளார்

banner

Related Stories

Related Stories