விளையாட்டு

"இந்திய அணி இத்தனை மோசமாக இருந்தால் அவ்வளவுதான்" - கொதித்தெழுந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி !

இன்று என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் தான். அது மிகவும் மோசமாக இருந்தது என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"இந்திய அணி இத்தனை மோசமாக இருந்தால் அவ்வளவுதான்" - கொதித்தெழுந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்தப் போட்டியில் 208 ரன்கள் குவித்திருந்த போதும் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணி. மோசமான பந்துவீச்சு இந்திய அணியை பெரிதும் பாதித்தது. சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார், காயத்தில் இருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் இருவர் மட்டும் தங்கள் 8 ஓவர்களில் 101 ரன்களை வாரி வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் மோசமான ஃபீல்டிங்கால் இந்திய அணியினர் 3 கேட்சுகளைத் தவறவிட்டனர். அதில் ஆட்ட நாயகன் கேமரூன் கிரீனின் கேட்சும் ஒன்று. பனி ஒரு பிரச்னையாக இருந்தாலும், இந்திய அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாகவே இருந்தது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் செயல்பாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.

"கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிகளைக் கவனித்தால், அங்கு அனுபவம், இளமை என அனைத்தும் கலந்து இருக்கும். இந்த அணியில் இளம் வீரர்களை என்னால் காண முடியவில்லை. ஃபீல்டிங்கில் அது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக இருக்கும் இந்திய அணியைப் பார்த்தால், அது எந்த வகையிலும் ஃபீல்டிங்கில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு நிகராக இல்லை. மிகப் பெரிய தொடர்களில் அது உங்ளைக் கடுமையாக பாதிக்கும். அதன் விளைவாக பேட்டிங்கில் நீங்கள் 15-20 ரன்கள் வரை அதிகமாக எடுக்கவேண்டியிருக்கும். ஃபீல்டிங்கில் எந்த சிறப்பம்சத்தையும் பார்க்க முடியவில்லை. அங்கு ஜடேஜாவும் இல்லை. அந்த X Factor எங்கே?" என்று முதல் டி20 போட்டி முடிந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ரவி சாஸ்திரி.

"இந்திய அணி இத்தனை மோசமாக இருந்தால் அவ்வளவுதான்" - கொதித்தெழுந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி !

209 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஓப்பனர்கள் கேமரூன் கிரீன், ஆரோன் ஃபின்ச் இருவரும் அதிரடியாக விளையாடி அசத்தினார். ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை அக்சர் படேல் வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது விக்கெட் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை.

கேமரூன் கிரீன் தன்னுடைய அதிரடியால் இந்திய அணியை தடுமாற வைத்தார். 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய அவர், 29 பந்துகளில் 61ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். ஆனால் அவர் கொடுத்த கேட்சை அக்சர் படேல் சரியாகப் பிடித்திருந்தால் அவர் விரைவிலேயே ஆட்டமிழந்திருப்பார். கிரீன் 42 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த எளிதான கேட்சை டீப் மிட்வெக்கெட்டில் இருந்த அக்சர் தவறவிட்டார்.

"இந்திய அணி இத்தனை மோசமாக இருந்தால் அவ்வளவுதான்" - கொதித்தெழுந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி !

அடுத்த ஓவரிலேயே லாங் ஆன் திசையில் இருந்து ஓடி வந்து ஒரு கேட்சைத் தவறவிட்டார் கேஎல் ராகுல். இருந்தாலும் இந்திய அணியைப் பெரிதும் பாதித்தது மாத்யூ வேடின் கேட்சை தவறவிட்டது தான். அவர் 1 ரன் எடுத்திருந்தபோது தன்னுடைய பந்துவீச்சிலேயே கிடைத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் ஹர்ஷல் படேல்.அதன்பிறகு அடித்து நொறுக்கிய வேட், 21 பந்துகளில் 45 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி, இந்திய அணி ஐசிசி தொடர்களை வெற்றி பெற வேண்டுமெனில் ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று கூறினார்.

"இன்று என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் தான். அது மிகவும் மோசமாக இருந்தது. மிகப் பெரிய தொடர்களில் பெரிய அணிகளை வீழ்த்தவேண்டும் என்றால், ஃபீல்டிங் தரத்தை இந்திய அணி உயர்த்தியே ஆகவேண்டும்" என்றும் கூறினார் சாஸ்திரி.

banner

Related Stories

Related Stories