விளையாட்டு

27 ஆண்டுகள்.. 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்: டென்னிஸ் உலகில் கோலோச்சிய செரீனா வில்லியம்ஸ்!

டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படும் செரீனா வில்லியம்ஸ் இன்று தன்னுடைய கடைசிப் போட்டியில் விளையாடினார்.

27 ஆண்டுகள்..  23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்:  டென்னிஸ் உலகில் கோலோச்சிய செரீனா வில்லியம்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படும் செரீனா வில்லியம்ஸ் இன்று தன்னுடைய கடைசிப் போட்டியில் விளையாடினார். அமெரிக்க ஓப்பன் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆய்லா டாம்லியானோவிச் உடன் மோதிய செரீனா, 5-7, 7-6 (7-4), 1-6 என தோல்வியடைந்தார். இதன் மூலம், சுமார் 27 ஆண்டுகள் நீடித்த அவருடைய டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

செரீனா வில்லியம்ஸ் - டென்னிஸ் கண்ட மகத்தான வீராங்கனைகளுள் ஒருவர். காம்ப்டன் எனும் சிறு நகரித்தில் பிறந்து மொத்த டென்னிஸ் உலகையும் ஆண்டவர். 1995ம் ஆண்டு தொழில்முறை போட்டிகளில் விளையாடத் தொடங்கிய செரீனா ஒற்றையர் பிரிவில் மட்டும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார். 7 ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டங்கள், 7 விம்பிள்டன் பட்டங்கள், 6 அமெரிக்க ஓப்பன் பட்டங்கள், 3 பிரெஞ்சு ஓப்பன் பட்டங்கள் என இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு அரங்கையும் ஆட்சி புரிந்தார் அவர்.

27 ஆண்டுகள்..  23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்:  டென்னிஸ் உலகில் கோலோச்சிய செரீனா வில்லியம்ஸ்!
John Minchillo

40 வயதான செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017 ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றார். அதன் பிறகு பல காயங்களால் அவதிப்பட்டவர் இந்த அமெரிக்க ஓப்பன் தொடரோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அதனால் அவர் பங்குபெற்ற ஒவ்வொரு போட்டிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் குவிந்தது. அவருடைய போட்டிகள் கவனம் பெறும் என்பதால் பிரபலமான ஆர்த்தர் ஆஷ் அரங்கில் அவை அனைத்தையும் நடத்தியது அமெரிக்க ஓப்பன் நிர்வாகம். முதல் போட்டியிலிருந்து, முதல் சர்வீஸில் இருந்து அவரைக் கொண்டாடியது அமெரிக்கா.

முதல் சுற்றில் டன்கா கொவினிச் உடன் மோதிய செரீனா 6-3, 6-3 என நேர் செட் கணக்கில் வென்று அசத்தினார். இரண்டாவது போட்டியில் எஸ்தோனிய வீராங்கனை அனெட் கோண்டாவீட்டை சந்தித்தார் செரீனா. உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் உடன் செரீனா மோதியதால் அது கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகச் சிறப்பாக விளையாடிய செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-4), 2-6, 6-2 என வெற்றி பெற்று மிரட்டினார்.

27 ஆண்டுகள்..  23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்:  டென்னிஸ் உலகில் கோலோச்சிய செரீனா வில்லியம்ஸ்!

அதன்பிறகு நேற்று இரட்டையர் பிரிவு போட்டியில் தன் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் உடன் சேர்ந்து கலந்துகொண்டார் . செக் குடியரசை சேர்ந்த நொஸ்காவா, ஹிரிடெஸ்கா இணையோடு மோதியது வில்லியம்ஸ் சகோதரிகள் இணை. கடுமையாகப் போராடிய அந்த ஜோடி 7-6 (7-5), 6-4 என தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று ஒற்றையர் பிரிவில் தன்னுடைய மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஆய்லா டாம்லியானோவிச் உடன் மோதினார் செரீனா வில்லியம்ஸ். மூன்றாவது செட்டின் இறுதியில் கிட்டத்தட்ட 6 மேட்ச் பாயின்ட்களை தவிர்த்த செரீனா, கடைசியில் போராடி தோல்வியடைந்தார். இந்தப் போட்டியோடு ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்தது.

போட்டி முடிந்ததும் கண்ணீர் மல்க அனைவருக்கும் விடை கொடுத்தார். "என் அப்பா, அம்மா, நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக வீனஸுக்கு. வீனஸ் இல்லாமல் இந்த செரீனா இல்லை. ஒவ்வொரு முறையும் 'கோ செரீனா' என்று கூறிய ஒவ்வொரு ரசிகருக்கும் என் நன்றி" என்று உணர்ச்சி பொங்க கூறி விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்.

banner

Related Stories

Related Stories