விளையாட்டு

‘டிரஸ்ஸிங் ரூமில் அமர வரவில்லை’ - ஆஸ்திரேலியாவில் இனவெறிக்கு ஆளான இந்திய அணி.. உண்மையை உடைத்த ரஹானே!

‘நாங்கள் இங்கு விளையாடவே வந்திருக்கிறோம். வெறுமனே டிரஸ்ஸிங் ரூமில் அமர வரவில்லை’ என்று நடுவர்களிடம் கூறினேன்

‘டிரஸ்ஸிங் ரூமில் அமர வரவில்லை’ - ஆஸ்திரேலியாவில் இனவெறிக்கு ஆளான இந்திய அணி.. உண்மையை உடைத்த ரஹானே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2020-21ல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த டெஸ்ட் தொடர் மிகமோசமாகத் தொடங்கியபோதும், அட்டகாசமான முறையில் கம்பேக் கொடுத்து அந்தத் தொடரை வென்றது இந்தியா.

முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அந்தப் போட்டி முடிந்ததும், இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமியோ காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். அந்தத் தொடர் போகப் போக ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா என பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். ஒருகட்டத்தில் இந்திய அணி பேக் அப் வீரர்களை வைத்து விளையாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இருந்தாலும், காபாவில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து 2-1 என தொடரை வென்றது இந்தியா.

வழக்கமாக ஆஸ்திரேலியாவோடு விளையாடும் போட்டிகளின்போது ஸ்லெட்ஜிங் போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால், இந்தத் தொடரின்போது மிகவும் மோசமான ஒரு சம்பவம் அரங்கேறியது. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது நடந்தது அந்த சம்பவம். ஆட்டத்தின் நான்காவது நாளில் இந்திய அணி பந்துவீசிக்கொண்டிருந்தபோது சில ரசிகர்கள் இந்திய வீரர்களை நோக்கி இனவெறியைத் தூண்டும் விதமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதை இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட, சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது.

“இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை களத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்று நாங்கள் முறையிட்டோம்” என்று அப்போது இந்திய கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானே தெரிவித்திருக்கிறார். “ஏற்கெனவே மூன்றாவது நாளே சிராஜ் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாயிருந்தார். அடுத்த நாளும் சில ரசிகர்கள் அவரை இனவெறி வார்த்தைகள் மூலம் காயப்படுத்தினர். அவர் அதைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நான் நடுவரிடம் சென்று முறையிட்டேன். சரியான நடவடிக்கை எடுக்கும்வரை நாங்கள் விளையாடமாட்டோம் என்று கூறினேன்” என்று சொல்லியிருக்கிறார் ரஹானே.

ஆனால், நடுவர்களோ விளையாட விருப்பம் இல்லையெனில், களத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று இந்திய வீரர்களிடம் கூறியிருக்கிறார்கள். “நீங்கள் போட்டியை நிறுத்திவைக்க் முடியாது. வேண்டுமானால் போட்டியிலிருந்து வெளியேறுங்கள் என்று நடுவர்கள் எங்களிடம் கூறினார்கள். ‘நாங்கள் இங்கு விளையாடவே வந்திருக்கிறோம். வெறுமனே டிரஸ்ஸிங் ரூமில் அமர வரவில்லை’ என்று நடுவர்களிடம் கூறினேன்.

தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய அந்த ரசிகர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றியே தீரவேண்டும் என்று தீர்க்கமாகக் கூறினேன். கடினமான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கும் சக வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பது முக்கியம். சிட்னியில் நடந்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று” என்று கூறியிருக்கிறார் ரஹானே. இந்திய வீரர்கள் முறையிட்ட பிறகு, ஆட்டம் சுமார் 10 நிமிடங்களுக்கு தடைபட்டது. அதன்பிறகு கேலரியில் இருந்த ஒருசில ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories