விளையாட்டு

‘83’ கிரிக்கெட் மட்டும்தான் இந்தியா தேசத்தை தலைநிமிர செய்ததா? - 'Gold' படம் சொல்லும் வரலாறு தெரியுமா?

சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என ஒரு பட்டியலிடுங்கள். அதில் 1948 ஒலிம்பிக்ஸிற்கு கீழ்தான் 83 உலகக்கோப்பை இருக்கும்.

‘83’ கிரிக்கெட் மட்டும்தான் இந்தியா தேசத்தை தலைநிமிர செய்ததா? - 'Gold' படம் சொல்லும் வரலாறு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் '83' படம் ஒளிபரப்பப்பட்டிருந்தது. 1983 உலகக்கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றதை மையப்படுத்திய படம். கிரிக்கெட் ரசிகர்கள் இந்த படத்தை வெகுவாக கொண்டாடியிருந்தனர்.

83 உலகக்கோப்பையை அப்படியே கண் முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதாக இந்த படம் இருக்கும். ஆனால், ஒரே நெருடலான விஷயம். அந்த உலகக்கோப்பை வெற்றி விளையாட்டு துறையில் இந்தியாவின் இன்னொரு மகத்தான சாதனையை மங்கடிப்பதாக இருப்பதுதான். குறிப்பாக, இந்த படம் அந்த இருட்டடிப்பு வேலையை அதிகமாகவே செய்திருக்கும்.

'சுதந்திரம் கிடைச்சு 36 வருசம் ஆச்சு கேப்டன். ஆனா இன்னும் மரியாத கிடைக்கல' இந்திய கிரிக்கெட் அணியின் மேனேஜரான மான் சிங் கதாபாத்திரம் இப்படியாக ஒரு வசனம் பேசியிருப்பார். படம் நெடுகிலும் இதே மாதிரியான அவதானிப்புகள் எக்கச்சக்க இடங்களில் நிரம்பியிருக்கும். இந்திய தேசத்தையே 83 உலகக்கோப்பை வெற்றிதான் தலைநிமிர செய்ததாகவும் அதுதான் இந்த தேசம் சாதித்த முதல் விஷயம் என்பதை போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதில் உண்மையில்லாமலும் இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய சித்தரிப்புகள்தான்.

ஆனால், கிரிக்கெட் மட்டுமே அந்த தலைநிமிர்வை சுதந்திர இந்தியாவிற்கு கொடுக்கவில்லை. குறிப்பாக, 83 உலகக்கோப்பை இந்தியாவின் முதல் சாதனை கிடையாது. அதற்கு முன்பே இந்திய ஹாக்கி அணி சாதித்திருக்கிறது. சொல்லப்போனால், இந்திய கிரிக்கெட் அணியை விட சவாலான காலகட்டத்தில் ஆடி இந்திய ஹாக்கி அணி சாதித்திருக்கிறது.

‘83’ கிரிக்கெட் மட்டும்தான் இந்தியா தேசத்தை தலைநிமிர செய்ததா? - 'Gold' படம் சொல்லும் வரலாறு தெரியுமா?

1948 க்கு முன்பாக ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி மூன்று முறை தங்கம் வென்றிருந்தது. ஆனால், அப்போது இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பிரிட்டிஷ் இந்தியா என்கிற அடையாளத்துடன் பிரிட்டிஷ் இந்திய கொடியுடனே களமிறங்கியிருந்தது.

இரண்டாம் உலகப்போரினால் தடைபட்டிருந்த ஒலிம்பிக்ஸ் மீண்டும் 1948 முதல் நடைபெற தொடங்கியது. 1948 இல் லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடந்திருந்த போது இந்தியா சுதந்திரம் தேசமாக மாறியிருந்தது. இந்திய தேசத்தின் மூவர்ண கொடியோடு இந்தியா இந்த ஒலிம்பிக்ஸில் களமிறங்கியிருந்தது.

களமிறங்கியது என ஒரே வார்த்தையில் இங்கே சுலபமாக குறிப்பிட்டு விட முடியும். ஆனால், அது அவ்வளவு சுலபமாக நடந்திருக்கவில்லை. இந்திய சுதந்திரத்தை பற்றி பேசும்போது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையையும் தவிர்க்கவே முடியாது. அந்த பிரிவினையும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறையும் ஒலிம்பிக்ஸிற்கு சென்ற இந்திய ஹாக்கி அணியையுமே பெரிதாக பாதித்தது. ஒன்றாக ஒரே ஒலிம்பிக்ஸ் கனவோடு பயிற்சி செய்து கொண்டிருந்த வீரர்கள் தேசத்தை போலவே இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு அணிகளாக துண்டாடப்பட்டனர். இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அணி சிதறுண்டது.

இந்த பிரிவினையின் ரணத்தை தாண்டி கடைசி நேரத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட அணிதான் லண்டன் ஒலிம்பிக்ஸிற்கு சென்றது. வழக்கம்போல இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. கிஷன் லால் தலைமையிலான இந்திய அணிக்கும் க்ரேட் பிரிட்டனுக்கும் இறுதிப்போட்டி. பல்பீர் சிங், பேட்ரிக் யான்சன், தர்லோச்சன் ஆகியோர் அசத்தினர். 4-0 என தி க்ரேட் பிரிட்டனை ஒன்றுமே இல்லாமல் ஆக்கி சுதந்திர இந்தியா வென்றது.

‘83’ கிரிக்கெட் மட்டும்தான் இந்தியா தேசத்தை தலைநிமிர செய்ததா? - 'Gold' படம் சொல்லும் வரலாறு தெரியுமா?

இருநூறு ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டனை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று, இந்திய தேசியக்கொடி உச்சத்தில் பறந்து ஒலிம்பிக்ஸ் அரங்கில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது எப்படி புல்லரித்தது?

2008 இல் அபினவ் பிந்த்ரா சாதித்து காட்டியதை ஒரு 13 ஆண்டுகள் கழித்து நீரஜ் சோப்ரா மீண்டும் செய்து காட்டினார். அதற்கே நமக்கெல்லாம் அப்படி இருந்தது. கொண்டாடி தீர்த்தோம். எனில், 1948 வெற்றியை நினைத்து பாருங்கள். ஒலிம்பிக்ஸ் அரங்கில் க்ரேட் பிரிட்டனின் கொடிக்கு மேல் இந்திய கொடி பறந்து கொண்டிருந்த அந்த தருணமும் அந்த அரங்கில் தேசிய கீதம் ஒலித்த பொழுதும் எப்படி இருந்திருக்கும்? இந்த சம்பவத்தைதான் அக்சய் குமார் நடிப்பில் 'Gold' என பாலிவுட் ஏற்கனவே படமாக எடுத்துவிட்டது. சிறப்பான படம்.

வெகுஜனங்களை கவர்ந்த விளையாட்டு என்பதாலும் மார்க்கெட் இருக்கும் விளையாட்டு என்பதாலும் மட்டுமே கிரிக்கெட்தான் இந்த தேசத்தினுடைய முதல் மரியாதை என பதிய வைப்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில், இந்தியா அதற்கு முன்பே வென்றிருக்கிறது. அதற்கு முன்பே தலைநிமிர்ந்திருக்கிறது. அதற்கு முன்பே இந்திய கொடி உயரே பறந்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என ஒரு பட்டியலிடுங்கள். அதில் 1948 ஒலிம்பிக்ஸிற்கு கீழ்தான் 83 உலகக்கோப்பை இருக்கும். 'கொடியேற்று...கொடியேற்று' என 83 படத்தில் ஒரு பாடல் வருகிறதே. உண்மையில் அந்த பாடல் 83 ஐ விட கோல்ட் படத்திற்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். 83 ஐ இன்னும் அதிகமாக கூட கொண்டாடலாம். 48 ஐ இருட்டடிப்பு செய்யாமல்!

banner

Related Stories

Related Stories