விளையாட்டு

RCB vs LSG: குழப்பமான பேட்டிங் ஆர்டர்; கோட்டை விட்ட கேட்ச்கள் - லக்னோ அணி எங்கெல்லாம் சறுக்கியது?

இந்த தவறுகளால்தான் லக்னோ இந்த சீசனில் சிறப்பாக ஆடியும் எலிமினேட்டரோடு வெளியேறியிருக்கிறது.

RCB vs LSG: குழப்பமான பேட்டிங் ஆர்டர்; கோட்டை விட்ட கேட்ச்கள் - லக்னோ அணி எங்கெல்லாம் சறுக்கியது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி அடுத்த தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. பெங்களூரு அணியின் ரஜத் பட்டிதர் அற்புதமாக ஒரு சதத்தை அடித்திருந்தார். ஆனால், லக்னோ அணியின் தோல்விக்கு இந்த சதம் மட்டுமே காரணமில்லை. இதை தாண்டியும் சில முக்கியமான தவறுகளை செய்திருந்தனர்.

பேட்டிங் - பௌலிங்கை தாண்டி இரண்டு அணிகளின் ஃபீல்டிங்கிலும் பாரதூர வேறுபாடு இருந்தது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு ஃபீல்டிங்கில் அவர்கள் சேமிப்பு செய்த ரன்களும் விடாமல் பிடித்த கேட்ச்சுகளும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஹசரங்கா மட்டுமே ஃபீல்டிங் மூலம் பெங்களூரு அணிக்கு ஒரு 15 ரன்களை சேமித்துக் கொடுத்திருந்தார். லக்னோ அணி இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருந்தது.

ரஜத் பட்டிதர் 54 பந்துகளில் 112 ரன்களை அடித்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். ஆனால், சதமடிக்க விடாமல் முன்னமே அவுட் ஆக்கியிருக்க முடியும். லக்னோ அணி அதை செய்ய தவறியிருந்தது. ரஜத் பட்டிதருக்கு மட்டும் 3 கேட்ச்சுகளை கோட்டைவிட்டிருந்தனர். அவர் 59, 73, 93 ஆகிய ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை லக்னோ ஃபீல்டர்கள் ட்ராப் செய்திருந்தனர். இதில் ஒரு கேட்ச்சையாவது சரியாக பிடித்திருந்தால் கூட பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்திருக்க முடியும். தினேஷ் கார்த்திக் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக 37 ரன்களை எடுத்திருந்தார். அவர் 2 ரன்களில் இருக்கும்போதும் ராகுல் ஒரு கேட்ச்சை ட்ராப் செய்திருந்தார். இதுபோக, மிஸ் ஃபீல்ட்கள் மூலம் ஏகப்பட்ட ரன்களை சுலபமாக விட்டனர்.

சேஸிங்கின் போது மனன் வோராவை நம்பர் 3 இல் இறக்கிவிட்டு எவின் லீவிஸை கடைசி வரை பென்ச்சிலேயே உட்கார வைத்திருந்தார்கள். இது மிகப்பெரிய தவறாக மாறியது. ஹோல்டரை நம்பர் 8 இல் இறக்கி வீணாக்க விரும்பவில்லை என ராகுல் கூறிய நிலையில், எவின் லீவிஸை மட்டும் எப்படி வீணடித்தார் என புரியவில்லை. எவின் லீவிஸ் டாப் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடியவர். ஹார்ட் ஹிட்டர். பேட்டை தூக்கினாலே பவுண்டரியும் சிக்சரும்தான் வரும். அப்படிப்பட்ட வீரரை ஆட்டம் கையைவிட்டு செல்லும் நிலையில் நம்பர் 6 இல் இறக்கி 6 பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள வைத்து ஏமாற்றமடைய வைத்தார்கள். கே.எல்.ராகுல் 58 பந்துகளில் 79 ரன்களை அடித்திருந்தார்.

நல்ல இன்னிங்ஸ்தான். ஆனால், கடைசி வரை நின்று மேட்ச்சை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். 19 வது ஓவர் வரை நின்றுவிட்டு தேவைப்பட்ட நேரத்தில் கச்சிதமாக அவுட் ஆகி சென்றது ஏமாற்றமளித்தது. 8 பந்துகளே மீதமிருந்த நிலையில் அந்த சமயத்தில் வந்த பேட்ஸ்மேன்கள் வந்த உடனேயே அடிக்க வேண்டும் என நினைக்கலாம். ஆனால், அது அரிதாகவே நிகழும். செட்டில் ஆகி நின்ற கே.எல்.ராகுல் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும்.

இந்த தவறுகளால்தான் லக்னோ இந்த சீசனில் சிறப்பாக ஆடியும் எலிமினேட்டரோடு வெளியேறியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories