விளையாட்டு

மில்லர்லாம் அவ்வளவுதான்னு சொன்னாங்க.. ஆனால் அன்பும் முக்கியத்துவமும்.. ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி பேச்சு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சொதப்பிவிட்டோம். ஆனால், இந்த ஆட்டத்தை மதிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.

மில்லர்லாம் அவ்வளவுதான்னு சொன்னாங்க.. ஆனால் அன்பும் முக்கியத்துவமும்.. ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2022 ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் போட்டியில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து, குஜராத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார் அவர்.

போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் மில்லரை வெகுவாகப் பாராட்டிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மில்லருடன் நடந்த உரையாடல் பற்றிக் குறிப்பிட்டார்.

“மில்லருடனான உரையாடல் முழுக்க முழுக்க இந்த விளையாட்டை மதிப்பதைப் பற்றித்தான். இந்த சீசன் முழுவதுமே ரஷீத் கான் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், நான் அதைவிட பெருமையாக நினைப்பது டேவிட் மில்லரை நினைத்துத்தான். ‘இந்த விளையாட்டை மதிப்போம்’ என்று அவரிடம் சொல்லியிருந்தேன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சொதப்பிவிட்டோம். ஆனால், இந்த ஆட்டத்தை மதிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். தோற்றாலும், அந்த போட்டிக்கு தேவையானதைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் போட்டியை முடிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்” என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

அந்தப் போட்டியில் 38 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய டேவிட் மில்லர் தன்னுடைய அந்த இன்னிங்ஸுக்காக ஆட்ட நாயகன் விருது வென்றார். ஒருகட்டத்தில் 14 பந்துகளில் 10 ரன்கள் தான் எடுத்திருந்தார் மில்லர். அப்போது, மறுமுனையில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். போட்டியின் இறுதிக் கட்டத்தில் அவர் வேகம் குறைந்தபோது, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார் மில்லர்.

நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த (72 ரன்கள்) சுப்மன் கில், மாத்யூ வேட் இருவரும் அடுத்தடுத்து வெளியேற, குஜராத் டைட்டன்ஸ் சற்று தடுமாறத் தொடங்கியது. ஆனால், நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் கூட்டணி ஆட்டத்தை குஜராத் பக்கம் எடுத்துவந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத அந்த பார்ட்னர்ஷிப் 106 ரன்கள் சேர்த்தது.

“பலரும் டேவிட் மில்லர் அவ்வளவு தான் என்று கூறினார்கள். ஆனால், அவரை ஏலத்தில் எடுத்ததிலிருந்து அவர் எங்கள் அணியின் மேட்ச் வின்னராகவே திகழ்ந்துகொண்டிருக்கிறார். இன்று அவர் செய்தது நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் தான்.

மில்லர்லாம் அவ்வளவுதான்னு சொன்னாங்க.. ஆனால் அன்பும் முக்கியத்துவமும்.. ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி பேச்சு

ஆனால், எங்களைப் பொறுத்தவரை அவருக்கான முக்கியத்துவத்தை கொடுப்பது, ஆதரவளிப்பது, அணி அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை தெளிவாக்குவது போன்றவை தான் முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்பட்டது. ஒருவேளை அவர் அதை செய்யத் தவறினால், ஒன்றும் பிரச்னை இல்லை. அது வெறும் ஒரு போட்டி தான்” என்று போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பின்போது கூறினார் ஹர்திக் பாண்டியா.

“அவர் தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றிய விதத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பொதுவாக அவர் மிகவும் சிறந்த ஆள். அதனால், அவரோடு விளையாடுவதை ஒரு வகையில் நான் பெருமையாக நினைக்கிறேன். அதை நான் அனுபவிக்கிறேன். உண்மையிலேயே அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவருக்கு எப்போதும் நல்ல விஷயங்களே நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு வீரருக்கு முக்கியத்துவமும் அன்பும் கொடுக்கும்போது, அவர்களால் எப்படி முன்னேற முடியும் என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

banner

Related Stories

Related Stories