விளையாட்டு

கில்லர் மில்லரின் அதிரடி; முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணி!

இந்த சீசனில் குஜராத் அணிக்காக பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்த வீரர். அப்படியானவரை ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே தனது இரண்டாவது பந்தில் எட்ஜ் ஆக்கி கேட்ச் ஆக்கினார்.

கில்லர் மில்லரின் அதிரடி; முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவே டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். இந்த சீசனில் 13 வது முறையாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸை தோற்றிருந்தார். டாஸை மட்டும் தோற்கவில்லை. கடைசியில் இந்த போட்டியையுமே ராஜஸ்தான் தோற்றிருக்கிறது.

ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 188 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக பட்லர் 89 ரன்களை எடுத்திருந்தார். சாம்சன் 47 ரன்களை எடுத்திருந்தார். ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது ஓவரிலேயே 3 ரன்களில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் யாஷ் தயாளின் பந்தில் அவுட் ஆகினார். ஓவர் தி விக்கெட்டில் வந்து பந்தை வெளியே திருப்பிய தயாள் ஜெய்ஸ்வாலை எட்ஜ் ஆக்கினார்.

கில்லர் மில்லரின் அதிரடி; முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணி!

நம்பர் 3ல் கேப்டன் சஞ்சு சாம்சன் இறங்கினார். சாம்சன் தொடக்கிதிலிருந்தே அதிரடியாக ஆடியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே லாங் ஆனில் சிக்சராக்கியிருந்தார். அடித்த முதல் 30 ரன்களையுமே பவுண்டரி மற்றும் சிக்சர்களிலேயே அடித்திருந்தார். பட்லர் கொஞ்சம் பொறுமையாகவே தொடங்கினார். ஷமியின் ஓவரில் மட்டும் 3 பவுண்டரிக்களை கவர்ஸில் அடித்திருந்தார். மற்றபடி மெதுவாகவே ஆடினார். பவர்ப்ளே முடிந்த உடனேயே ஸ்பின்னர்களான ரஷீத்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரை ஹர்திக் பாண்ட்யா அறிமுகப்படுத்தினார். பவர்ப்ளே தாண்டியபிறகு இந்த மிடில் ஓவர்களில் ராஜஸ்தானின் ரன் வேகம் கொஞ்சம் குறைய தொடங்கியது.

செட்டில் ஆகியிருந்த பட்லர்-சாம்சன் கூட்டணியை தமிழக வீரரான சாய் கிஷோரே வீழ்த்தியிருந்தார். மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் சாம்சனுக்கு இடமே கொடுக்காமல் சாய் கிஷோர் வீசிக்கொண்டிருந்தார். இதனால் ஆஃப் சைடிலும் லெக் சைடிலும் நகர்ந்தபடியேதான் சாம்சன் ஆட முயன்றார். ஆஃப் சைடில் நகர்ந்து லாங் ஆனில் அடிக்க முயன்ற ஒரு ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் கேட்ச் ஆகியிருந்தார்.

நம்பர் 4 இல் வந்த இடதுகை பேட்ஸ்மேனான படிக்கல் இடதுகை ஸ்பின்னரான சாய் கிஷோரை அட்டாக் செய்து சில பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்து 28 ரன்களை அடித்திருந்தார்.

முக்கிய வீரர்கள் எல்லாம் அவுட் ஆன பிறகே பட்லர் தனது ஆட்டத்தை தொடங்கினார். முதல் 38 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பட்லர், அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்தார். கடைசி 4 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 60 ரன்களை சேர்த்திருந்தது. ஓவருக்கு 15 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் வந்திருந்தது. இதற்கு முழுக்க முழுக்க பட்லர் மட்டுமே காரணம். சிக்சர்களும் பவுண்டரிக்களுமாக அடித்து அசத்யியிருந்தார். பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்திருந்தது.

குஜராத் அணிக்கு 189 ரன்கள் டார்கெட். குஜராத் அணிக்குமே தொடக்கம் அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. விருத்திமான் சஹா இந்த சீசனில் குஜராத் அணிக்காக பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்த வீரர். அப்படியானவரை ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே தனது இரண்டாவது பந்தில் எட்ஜ் ஆக்கி கேட்ச் ஆக்கினார்.

முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்திருந்தாலும் பவர்ப்ளேயில் குஜராத் அணி நன்றாக ஆடியிருந்தது. 64 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்திருந்தது. இந்த சீசனில் பவர்ப்ளேயில் குஜராத் அணி எடுத்த அதிகப்ட்ச ரன்கள் இதுதான். கில்லும் வேடும் பவுண்டரிக்களாக அடித்து ரன்களை கூட்டியிருந்தனர். கில் & வேட் இருவருமே 35 ரன்களில் அவுட் ஆகினர்.

இதன்பிறகு, மில்லரும் ஹர்திக் பாண்ட்யாவும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் ரொம்பவே பொறுப்போடு கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்கிற தீரத்தோடு ஆடியிருந்தனர். ரன்ரேட் கைக்குள் வைத்துக் கொண்டு அதேநேரத்தில் ஜாக்கிரதையாகவும் ஆடினர். ஏதுவான பந்துகளில் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்திருந்தனர். குஜராத்துக்கு சாதகமாக சென்ற போட்டி, மெக்காய் 19 வது ஓவரை சிறப்பாக வீச 20 வது ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய இந்த கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையுமே மில்லர் சிக்சராக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதன்மூலம் முதல் அணியாக குஜராத் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றது.

ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களிலும் மில்லர் 68 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து 119 ரன்களை அடித்திருந்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை ராஜஸ்தான் உடைக்க தவறியதால்தான் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தோற்றுப்போனாலும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் அவர்களால் ஆட முடியும்.

banner

Related Stories

Related Stories