விளையாட்டு

#IPL2022 : ருத்துராஜ் + கான்வே சென்னையின் ஏக்கத்தை தீர்த்த வெற்றிக்கூட்டணி !

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

#IPL2022 : ருத்துராஜ் + கான்வே சென்னையின் ஏக்கத்தை தீர்த்த வெற்றிக்கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இன்னமும் ப்ளே ஆஃப்ஸுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர்கள் ருத்துராஜ் கெய்க்வாட்டும் டெவான் கான்வேவுமே. சென்னை அணி முதலில் பேட் செய்து 202 ரன்களை எடுத்திருந்தது. இந்த 202 ரன்களில் 182 ரன்களை இந்த ஓப்பனிங் கூட்டணியே எடுத்திருந்தது. இந்த சீசனில் சென்னை அணியின் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அதன் ஓப்பனர்களே. ஓப்பனிங்கில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் சென்னை அணிக்கு கிடைக்காமலே இருந்தது. இந்த சீசனில் முதல் 8 போட்டிகளில் சென்னை அணியின் ஓப்பனர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்த அதிகப்பட்ச ரன்கள் 28 மட்டும்தான். ஒரு அரைசத ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கூட சென்னைக்கு அமைந்திருக்கவில்லை. ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் கிடைக்காததே சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கிடைக்காத அந்த குறை இந்த போட்டியில் சென்னை அணிக்கு தீர்ந்திருந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டும் டெவான் கான்வேயும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். ஆனால், முதல் போட்டியுடனே டெவான் கான்வே பென்ச்சில் வைக்கப்பட்டார். 4 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் கான்வேயை நுழைக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ருத்துராஜூம் உத்தப்பாவுமே ஓப்பனர்களாக இறங்கி வந்தனர். இந்த கூட்டணியால் அவ்வளவு சிறப்பான இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை.

இந்நிலையில்தான் நேற்றைய போட்டியில் ப்ராவோ காயம் காரணமாக ஆட முடியாமல் போக, அவருக்கு பதில் டெவான் கான்வேயை அணியில் சேர்த்திருப்பதாக தோனி அறிவித்தார். டெவான் கான்வேயும் ருத்துராஜும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர்.

'Partnership is all about complementing each other' என சொல்வார்கள். ஒரு பார்ட்னர்ஷிப்பில் சக வீரரின் ஆட்டத்தையும் அணுகுமுறையையும் முழுமையாக புரிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு தம்முடைய ஆட்டத்தை கொஞ்சம் தகவமைத்து ஆட வேண்டும். அப்போதுதான் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகும். இந்த தத்துவத்தை ருத்துராஜ் கான்வே கூட்டணி சரியாக புரிந்திருந்தது. ஐ.பி.எல் லிலேயே கான்வேக்கு இதுதான் இரண்டாவது போட்டி. ஆக, அவர் நின்று களத்தை உணர்ந்து செட்டில் ஆகி அடிக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும். எந்த அசௌகரியமும் அழுத்தமும் ஏற்படாமல் கான்வே அந்த நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமெனில் ஸ்கோரை முன்னகர்த்தும் பொறுப்பை ருத்துராஜ் ஏற்றுக்கொள்ள வேண்டும். ருத்துராஜ் அதை ஏற்றுக்கொண்டார்.

'இது என்னுடைய சொந்த மைதானம். நான் ஸ்கோரை முன்னகர்த்தி ஆடுகிறேன்.நீங்கள் உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்' என கான்வேயிடம் கூறியதாக ருத்துராஜ் போட்டிக்கு பிறகான பேட்டியில் கூறினார்.

பவர்ப்ளேயில் கான்வே கொஞ்சம் தடுமாறியிருந்தார். ஆனால், ருத்துராஜோ கான்வேக்காக ரிஸ்க் எடுத்து சில பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்து அழுத்தம் ஏறாமல் பார்த்துக் கொண்டார். பவர்ப்ளே முடிந்த பிறகு அபாயகரமான பௌலரான உம்ரான் மாலிக்கை ருத்துராஜ் தனியாக கவனித்தார். ருத்துராஜூக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுப்பது மட்டுமே கான்வேயின் வேலையாக இருந்தது. உம்ரான் மாலிக்கின் அதிவேக டெலிவரிக்களை வந்த வேகத்தில் அவர் தலைக்கு மேலேயே ருத்துராஜ் பவுண்டரிக்களாக்கினார். உம்ரானுக்கு எதிராக 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்துராஜ் ஸ்கோர் செய்திருந்தார்.

அபாயகரமான பௌலரை ருத்துராஜ் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள, இன்னொரு முனையில் வீசிய பார்ட் டைமரான மார்க்ரமை அடித்து கான்வே கொஞ்சம் ஸ்கோரை முன்னகர்த்த தொடங்கினார். 39 பந்துகளில் கான்வே அரைசதத்தை கடந்தார். கான்வே அரைசதத்தை கடக்கும் வரைக்குமே அவரை மனதில் வைத்தே ருத்துராஜ் ஆடியிருந்தார். ருத்துராஜின் உதவியால் செட்டில் ஆகிவிட்ட கான்வேயும் பின்னர் அடிக்க தொடங்கினார். தொடக்கத்தில் 100 க்கும் கீழ் ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்த கான்வே கடைசிக்கட்டத்தில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்ய ஆரம்பித்தார். ருத்துராஜ் 99 ரன்களில் அவுட் ஆன போதும் கான்வே 85 ரன்களில் கடைசி வரை நாட் அவுட் ஆக இருந்தார்.

இந்த சீசனில் இதுவரை சென்னை ஏக்கமாக இருந்த ஒரு அற்புதமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்த போட்டியில் கிடைத்திருக்கிறது. ஒருவருக்கொருவர் ஒத்துழத்து ருத்துராஜூம் கான்வேயும் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியிருக்கின்றனர். இந்த ஆட்டம் அப்படியே தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories