விளையாட்டு

IPL 2022 : Play off வாய்ப்பை முதலில் இழக்கப்போவது யார்? வாழ்வா சாவா போராட்டத்தில் சென்னையும் மும்பையும்!

சென்னை அணி 6 போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. மும்பை அணியும் அதே 6 போட்டிகளில் ஆடி அத்தனையிலும் தோற்றிருக்கிறது.

IPL 2022 : Play off வாய்ப்பை முதலில் இழக்கப்போவது யார்? வாழ்வா சாவா போராட்டத்தில் சென்னையும் மும்பையும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல்-ன் எல் க்ளாஸிகோ என சொல்லும் அளவுக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டிகள் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். ஆனால், இந்த போட்டி வழக்கத்தைவிட இன்னும் கூடுதலான பரபரப்போடு இருக்கப்போகிறது.

ஏனெனில், இரண்டு அணிகளுமே வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. சென்னை அணி 6 போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. மும்பை அணியும் அதே 6 போட்டிகளில் ஆடி அத்தனையிலும் தோற்றிருக்கிறது. இரண்டு அணிகளுமே இன்னும் 1 போட்டியில் தோற்றால் கூட ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை ஏறக்குறைய தவறவிடும் சூழல் ஏற்படும். ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டு அணிகளுமே வெற்றிகரமான அணிகளாக இதுவரை வலம் வந்து கொண்டிருந்தனர்.

மும்பை ஐந்து முறை சாம்பியனாகியிருக்கிறது. சென்னை நான்கு முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. நடப்பு சாம்பியனே சென்னைதான். கடந்த 5 சீசன்களையும் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள்தான் மாறி மாறி வென்றிருந்தன. இப்படியான ஆதிக்கத்தை செலுத்திய இரண்டு அணிகள் இந்த தொடரில் தங்களை உயிர்ப்போடு வைத்து கொள்வதற்கான நெருக்கடியோடு இந்த போட்டியில் மோதப்போகின்றனர். அதனால்தான் வழக்கத்தை விட இந்த போட்டி கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளிலுமே ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன. தீபக் சஹார், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இல்லாமல் சென்னை அணியின் பந்துவீச்சு ரொம்பவே பலவீனமாக இருக்கிறது. பவர்ப்ளேயில் தொடர்ச்சியாக சென்னை பவுலர்கள் சொதப்பி வந்த நிலையில் கடந்த ஒன்றிரண்டு போட்டிகளாக ஸ்பின்னரான மஹீஸ் தீக்சனா பவர்ப்ளேயில் நல்ல தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வீசுகிறார். ஆனால், ஒரு பக்கம் அடைத்தால் இன்னொரு பக்கம் ஓட்டையாவதை போல கடந்த போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை சரமாரியாக அடி வாங்கியிருந்தது.

குஜராத்திற்கு எதிராக கையிலிருந்த போட்டியை ஜோர்டனின் டெத் ஓவர் சொதப்பலால் சென்னை கோட்டைவிட்டது. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் ஜோர்டனை உட்கார வைத்துவிட்டு ப்ரெட்டோரியஸை இறக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சிறப்பாக வீசியும் மஹீஷ் தீக்சனாவுக்காக ப்ரெட்டோரியஸ் வெளியில் உட்காந்திருக்கிறார். அவர் மீண்டும் வரும்பட்சத்தில் சென்னையின் பந்துவீச்சு கொஞ்சம் பலமடைய வாய்ப்பிருக்கிறது.

சென்னையை போன்றே மும்பைக்கும் பவர்ப்ளே-டெத் ஓவர் என எல்லாமே பிரச்சனைதான். பும்ராவை மட்டுமே அதிகம் நம்பியிருப்பதே அந்த அணியின் பலவீனம். மற்ற வீரர்கள் சகட்டுமேனிக்கு ரன்களை வாரி வழங்குகின்றனர். பேட்டிங்க ரோஹித்சர்மார், பொல்லார்ட் போன்ற சீனியர்கள் இன்னமும் பேட்டை வீசாமல் இருக்கின்றனர். சென்னைக்கு எதிராகவென்றால் எப்போதுமே கூடுதல் உத்வேகத்துடன் ஆடும் பொல்லார்ட் இந்த போட்டியிலேயே ஃபார்முக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரோஹித்தின் ரெக்கார்டும் கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே ரொம்பவே சுமாராக இருக்கிறது. அவரும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடியே ஆக வேண்டும்.

எப்போதும் மோதிக்கொள்வதை விட இந்த முறை மோதிக்கொள்வதற்கு சென்னைக்கும் மும்பைக்கும் அதிகப்படியான காரணங்கள் இருக்கிறது. எப்போதையும் போல தங்களின் பெருமையை நிலைநாட்டுவதற்கால அல்ல. தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காகவே இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன. வலியது வெல்லும். வீழ்வது ஓரங்கட்டப்படும்!

banner

Related Stories

Related Stories