விளையாட்டு

#IPL2022 : பஞ்சாபை ஊதித்தள்ளிய டெல்லி.. வலுவிருந்தும் போராட மறுக்கும் பஞ்சாப் - குமுறும் ரசிகர்கள் !

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கடுமையாக சொதப்பவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரொம்பவே சுலபமாக வென்றிருக்கிறது.

#IPL2022 : பஞ்சாபை ஊதித்தள்ளிய டெல்லி.. வலுவிருந்தும் போராட மறுக்கும் பஞ்சாப் - குமுறும் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கடுமையாக சொதப்பவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரொம்பவே சுலபமாக வென்றிருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே டாஸை வென்றிருந்தது. இந்த சீசனின் வழக்கப்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேஸிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 115 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த சீசனில் ஒரு அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். தொடக்கத்திலிருந்தே பஞ்சாப் அணிக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. பவர்ப்ளேயில் மட்டும் தவாண், மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்திருந்தது. 4,5,6,7 ஆகிய நான்கு ஓவர்களிலும் ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர்கள் வீழ்த்தியிருந்தனர். இங்கேயே பஞ்சாபின் ஆட்டம் முடிந்துவிட்டது. பின்னர், ஷாரூக்கானும் ஜித்தேஷ் சர்மாவும் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயன்றாலும் அவர்களாலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இதனால் பஞ்சாப் அணி 115 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.

116 ரன்களை சேஸ் செய்த டெல்லி அணி அதிவிரைவாக அந்த டார்கெட்டை எட்டி முடித்தது. குறைவான டார்கெட் என்பதால் சீக்கிரமே வென்று ரன்ரேட்டை ஏற்றிக்கொள்வதே டெல்லியின் எண்ணமாக இருந்தது. அதற்கேற்றவாறு டேவிட் வார்னரும் பிரித்திவி ஷாவும் அதிரடியாக வெளுத்தெடுத்தனர். பவர்ப்ளேயில் மட்டுமே 81 ரன்களை சேர்த்திருந்தனர். 20 பந்துகளில் 41 ரன்களை எடுத்து பிரித்திவி ஷா அவுட் ஆன போதும், டேவிட் வார்னர் நின்று ஆடி 10.3 ஓவர்களிலேயே இலக்கை எட்ட வைத்தார். 9.3 ஓவர்களை மீதம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றிருந்தது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரைக்கும் மற்ற அணிகளை காட்டிலும் அபாயகரமான பேட்டிங் லைன் அப்பை கொண்டிருக்கும் அணி. ஆனாலும் தொடர்ச்சியாக பேட்டிங்கில் ஒரு வெற்றிகரமான ஸ்கோரை எடுக்க முடியாமல் அந்த அணி திணறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அந்த அணியின் அணுகுமுறையில் உள்ள ஓட்டைகளே மிகமுக்கிய காரணமாக இருக்கிறது. அக்சய் குமார் நடிப்பில் 'Gold' என ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்தது. ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட போட்டி அது. அதில் இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு பயிற்சி அளிக்கப்படும். அதாவது, மைதானத்தில் ஒரு முனையில் இருக்கும் நூற்றுக்கணக்கான செங்கல்களை அடுத்த முனைக்கு கொண்டு செல்ல வேண்டு என வீரர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். ஒவ்வொரு வீரரும் ஆளாளுக்கு ஒரு செங்கலை தூக்கிக் கொண்டு அடுத்த முனைக்கு ஓடுவார்கள். ஓடி ஓடி வீரர்கள் அத்தனை பேரும் களைத்து போகும்போதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் தோன்றும். அதாவது, நாம் தனித்தனியாக செயல்படுவதால்தான் இப்படி கஷ்டப்படுகிறோம். நாம் ஒன்றாக இணைந்து வரிசையாக ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை சங்கிலி போல நின்று செங்கல்களை கைமாற்றினால் எளிதில் வேலையை முடித்துவிடலாம் என முடிவெடுப்பார்கள். ஒரு அணியாக ஒன்றாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இதுதான் பஞ்சாப் அணியின் பிரச்சனையும் கூட. 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் சிக்சர்களாக பறக்கவிடக்கூடிய பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் போன்ற வீரர்களை வைத்துக் கொண்டு அந்த அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்? ஒவ்வொரு பந்தையும் சிக்சராக்குவதுதான் டி20 பேட்ஸ்மேன்களின் நோக்கமாக இருக்கும். அது சரியானதுதான். ஆனால், அது சூழல் சார்ந்து இருக்க வேண்டும். வரிசையாக விக்கெட் விழும்போதும் பதுங்கி ஆடமாட்டேன் என முரண்டு பிடிப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது? பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் ரொம்ப சிறப்பாக இருக்கும். அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் அந்த அணிதான் முதலிடத்தில் இருக்கும். ஆனால், பஞ்சாப் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிற அணுகுமுறை அணிக்கு உதவாத போது வேறு பாணியை பஞ்சாப் அணி கையிலெடுத்தாக வேண்டும். அது அணியை முன்னிலைப்படுத்தக்கூடிய அணி எதிர்பார்க்கும் வெற்றியை தேடித்தரக்கூடிய ஒரு பாணியாக இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories