விளையாட்டு

ஆறாவது தோல்வி - முன்னேற்றமே இல்லாத மும்பை இந்தியன்ஸ்: அடுத்து என்ன?

நடப்பு ஐ.பி.எஸ் தொடரில் தொடர்ச்சியாக 6 ஆவது தோல்வியை பெற்று அதிர்ச்சியளித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஆறாவது தோல்வி - முன்னேற்றமே இல்லாத மும்பை இந்தியன்ஸ்: அடுத்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொடர்ச்சியாக 6 ஆவது தோல்வியை பெற்று அதிர்ச்சியளித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை வென்று புள்ளிக்கணக்கை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமளிக்கும் வகையில் 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

பேட்டிங்-பௌலிங்-ஃபீல்டிங் என ஒட்டுமொத்தமாகவே மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. அதனால்தான் வரிசையாக 5 போட்டிகளில் தோற்றிருந்தது. தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டுமெனில், கடந்த 5 போட்டிகளில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகளில் கொஞ்சமேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், மும்பையிடம் அப்படியான எந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் தெரியவில்லை. ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியே பந்துவீசியிருந்தது. கடந்த போட்டியில் மும்பையின் பௌலர்கள் 198 ரன்களை வாரியிறைத்திருந்தனர். இந்த போட்டியில் அதை விட அதிகமாக 1 ரன்னை கூடுதலாக கொடுத்து 199 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். மும்பைக்கு டார்கெட் 200. கடந்த போட்டியை காட்டிலும் இந்த போட்டியில் முன்னேற்றம் என எதுவுமே இல்லை.

ஆறாவது தோல்வி - முன்னேற்றமே இல்லாத மும்பை இந்தியன்ஸ்: அடுத்து என்ன?

கடந்த 5 போட்டிகளில் சராசரியாக முதல் 6 ஓவர் பவர்ப்ளேயில் மும்பை பௌலர்கள் ஓவருக்கு 7.47 என்ற விகிதத்தில் ரன்களை வழங்கியிருக்கின்றனர். 7.47 எனில் 6 ஓவர்களுக்கு சராசரியாக 45 ரன்கள் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த போட்டியில் லக்னோவிற்கு 57 ரன்களை பவர்ப்ளேயில் வாரி வழங்கியிருந்தனர். ரன்ரேட் 9 க்கும் மேல் சென்றிருந்தது. லக்னோ அணியின் பேட்டர்கள் இந்த சீசனில் பவர்ப்ளேயில் ஓவருக்கு 6.6 என்ற அளவிலேயே ஸ்கோர் செய்திருக்கின்றனர். எனில், அவர்கள் வழக்கத்தை விட மும்பைக்கு எதிராக அதிரடியாக ஆடியிருக்கிறார்கள்.

கடந்த 5 போட்டிகளில் 7-15 இந்த மிடில் ஓவர்களில் சராசரியாக ஓவருக்கு 9 என்ற விகிதத்தில் ரன்களை வழங்கியிருக்கின்றனர். 9 எனில் இந்த 7-15 ஓவர்களில் சராசரியாக 81 ரன்களை வழங்கியிருக்கிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே லக்னோவிற்கு எதிராக இதே 7-15 மிடில் ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். ரன்ரேட் 10 க்கும் மேல். வழக்கமாக, இந்த தொடரில் இந்த மிடில் ஓவர்களில் லக்னோவின் ரன்ரேட் 8.38 மட்டுமே. ஆக, இந்த பகுதியிலும் மும்பை கோட்டைவிட்டிருக்கிறது. லக்னோ தங்களின் சராசரியை விட அதிகமாக அடித்திருக்கிறது.

கடந்த 5 போட்டிகளில் 16-20 இந்த டெத் ஓவர்களில் மும்பை அணி ஓவருக்கு 14.24 என்ற விகிதத்தில் ரன்களை வழங்கியிருக்கிறது. 14.24 எனில் ஏறக்குறைய சராசரியாக 70 ரன்களை இந்த பகுதியில் மும்பை வழங்குகிறது. ஆனால், இந்த போட்டியில் இந்த 5 ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். ரன்ரேட் 10 க்கும் நெருக்கமாக இருக்கிறது. கடந்த போட்டியை விட கொஞ்சமேனும் மும்பை முன்னேறியிருக்கும் இடம் இது மட்டும்தான். அதுவும் பும்ராவும் உனத்கட்டும் தலா ஒரு ஓவரை கொஞ்சம் டைட்டாக வீசியிருந்தனர். அதனால் மட்டுமே இது சாத்தியப்பட்டது. மற்றபடி மில்ஸ் எல்லாம் ஓவருக்கு 22 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார்.

ஆறாவது தோல்வி - முன்னேற்றமே இல்லாத மும்பை இந்தியன்ஸ்: அடுத்து என்ன?

லக்னோ அணி பேட்டிங்கில் பவர்ப்ளேயில் 57 ரன்களை எடுத்திருந்ததல்லவா? அதேமாதிரியே மும்பையும் சேஸிங்கின் போது பவர்ப்ளேயில் 57 ரன்களை எடுத்திருந்தது. லக்னோ டெத் ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மும்பையோ டெத் ஓவர்களில் 56 ரன்களை எடுத்திருந்தது. ஆனாலும், 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றிருக்கிறதே? காரணம், 7-15 மிடில் ஓவர்கள். இந்த ஓவர்களில் லக்னோ 93 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், மும்பையோ வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. லக்னோ அணி இவ்வளவு அதிக ரன்களை எடுக்க காரணம் ஓப்பனர் கே.எல்.ராகுல். அவர் நன்றாக செட்டில் ஆகி விக்கெட்டே விடாமல் ஒரு முனையில் நின்றார். அவரை சுற்றி அழுத்தமே இல்லாமல் மற்ற வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

ராகுலை போன்று மும்பை அணிக்கு நின்று ஆடியது யார்? கேப்டன் ரோஹித் சர்மா அந்த பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் பவர்ப்ளேக்குள்ளேயே தொடர்ந்து அவுட் ஆகிவிடுகிறார். சூர்யகுமார் யாதவ் எப்போதுமே அந்த அரைசதத்தை கடந்தவுடன் அவுட் ஆகிவிடுவார். நேற்று அது கூட இல்லை. இஷன் கிஷன் அரிதினும் அரிதாகத்தான் இப்படியான அசாத்தியங்களை நிகழ்த்துவார்.

மேலே ஆடும் முக்கியமான வீரர்கள் எல்லாம் இப்படி சொதப்பிவிட்டு பொல்லார்டை மட்டும் குறை சொல்லி என்ன ப்ரயோஜனம்? 18 வயதில் முதல் சீசனில் ஆடிக்கொண்டிருக்கும் ப்ரெவீஸ் அவரிடம் எதிர்பார்த்ததற்கு மீறி அதிகமாக பெர்ஃபார்ம் செய்கிறார். திலக் வர்மா வயதை மீறிய பக்குவத்துடன் ஆட முற்படுகிறார். சிறப்பாக ஆடிவரும் இவர்கள் மீது இன்னும் சுமையை ஏற்ற முயற்சிப்பது பின்னடைவையே கொடுக்கும். சீனியர் வீரர்கள் முன் வந்து உத்வேகமளிக்கும் வகையில் ஆட வேண்டும். ஆனால், அது நடப்பதே இல்லை. அது நிகழும் வரை மும்பைக்கு தோல்வியிலிருந்து விடுதலையே கிடையாது.

banner

Related Stories

Related Stories