விளையாட்டு

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட இந்திய பெண்கள் அணி.. காரணம் என்ன?

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட இந்திய பெண்கள் அணி.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பெண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நியுசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் இந்திய அணி தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கும் வெளியேற்றத்திற்கும் காரணம் என்ன?

இந்த போட்டியில் இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 50 ஓவர்களில் 274 ரன்களை குவித்திருந்தது. ஓப்பனர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா இருவருமே அரைசதம் அடித்திருந்தனர். கேப்டனான மிதாலி ராஜூம் மிடில் ஆர்டரில் இறங்கி அரைசதம் அடித்திருந்தார். கடைசியில் துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் அடிக்க இந்திய அணி 274 ரன்களை அடித்தது.

தென்னாப்பிரிக்காவை இந்த டார்கெட்டுக்குள் டிஃபண்ட் செய்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியும் என்ற சூழலில் பரபரப்பான சேஸிங் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா சார்பில் வோல்வார்ட், குடால், டூ ப்ரீஷ் ஆகியோர் மிகச்சிறப்பாக ஆட போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்றது. கடைசி சில ஓவர்களில் இரு அணிகளும் மாறி மாறி முன்னேற போட்டி திக்திக் நிமிடங்களை எட்டியது. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. கடைசி ஓவரை இந்தியா சார்பில் தீப்தி சர்மா வீசினார்.

முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்த நிலையில் கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற சூழலில் டூ ப்ரீஷ் அரைசதம் கடந்து க்ரீஸில் இருந்தார். தீப்தி சர்மா 5 வது பந்தை வீசினார். டூ ப்ரீஷ் அதை தூக்கியடிக்க லாங் ஆனில் நின்ற ஹர்மன்ப்ரீத் கவுரிடம் கேட்ச் ஆனார். ஒட்டுமொத்த இந்திய அணியும் வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்தது. ஆனால், அதிர்ச்சி காத்திருந்தது. நடுவர் அதை நோ-பால் என அறிவிக்கவே டூ ப்ரீஷ் மீண்டும் க்ரீஸிற்கு வந்தார். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை எளிதில் எடுக்கவே தென்னாப்பிரிக்கா வென்றது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட இந்திய பெண்கள் அணி.. காரணம் என்ன?

இந்திய அணி இந்த போட்டியில் தோற்றதற்கு தீப்தி சர்மாவின் நோ-பாலும் அதற்கு முன் ஸ்மிருதி மந்தனா தவறவிட்ட ஒரு கேட்ச்சும் காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் இந்த போட்டியில் தோற்றதற்கான காரணமே ஒழிய இந்த தொடரிலிருந்து வெளியேறியதற்கான காரணம் இல்லை.

இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடருக்குள் ஒரு சரியான முன் திட்டமிடலுடனே வரவில்லை. பேட்டிங் ஆர்டரில் செய்த குழப்பங்களே அதற்கு சாட்சி.

ஆடியிருக்கும் 7 போட்டிகளில் மூன்று முறை ஓப்பனிங் கூட்டணி மாறியிருக்கிறது. முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவும் ஷெஃபாலியும் ஓப்பனிங் இறங்க அடுத்தடுத்த போட்டிகளில் ஸ்மிருதியுடன் யஸ்திகா பாட்டியா ஓப்பனிங் இறங்கினார். சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் ஷெஃபாலி வர்மா ஓப்பனராக்கப்பட்டார். நம்பர் 3/4 லும் எக்கச்சக்க மாற்றங்கள். சமீபமாகவே நம்பர் 4 இல் ஆடி பழக்கப்பட்ட மிதாலி ராஜ் திடீரென நம்பர் 3 க்கு மாறினார். திடீரென மீண்டும் நம்பர் 4 ஆனார். தீப்தி சர்மா இந்த தொடரை நம்பர் 3 இல் தொடங்கினார். ஆனால், முடிக்கும்போது நம்பர் 9 இல் முடித்தார். இப்படி பேட்டிங் ஆர்டரில் எக்கச்சக்க மாற்றங்களும் குழப்பங்களும் இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த உலகக்கோப்பைக்கு சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணி நியுசிலாந்தில் வைத்து நியுசிலாந்தை எதிர்த்தே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியிருந்தது. இதுபோக இரண்டு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களிலும் ஆடியிருந்தது. இந்த 7 போட்டிகளிலுமே உலகக்கோப்பையில் ஆடப்போகும் பேட்டிங் ஆர்டர் இதுதான் என்பதில் தெளிவாகியிருக்க வேண்டும். அதை இந்திய அணி செய்ய தவறியது.

உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் ஆடும்போது ஒட்டுமொத்தமாக அந்த தொடரை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு போட்டிக்குமாக யோசித்து சகட்டுமேனிக்கு மாற்றங்களை செய்ததன் விளைவாகவே இந்திய அணி இப்படி தோற்று நிற்பதற்கு காரணம்.

banner

Related Stories

Related Stories