விளையாட்டு

“அவர் அப்படித்தான்.. வெயிட் பண்ணுங்கப்பா” : ருத்துராஜின் டக் அவுட்டும் காத்திருக்கும் சம்பவங்களும் !

ஐ.பி.எல் இன் தொடக்க போட்டிகளில் ருத்துராஜ் சொதப்புவது ஒரு வழக்கமாகவே தொடர்கிறது. ஒருவகையில், ருத்துராஜின் சொதப்பல்கள் பெரும் புயலுக்கு முன்பான பேரமைதி வகையை சார்ந்தவை.

“அவர் அப்படித்தான்.. வெயிட் பண்ணுங்கப்பா” : ருத்துராஜின் டக் அவுட்டும் காத்திருக்கும் சம்பவங்களும் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் 15 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது.

சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கொல்கத்தா மிக எளிதாகவே இந்த ஸ்கோரை சேஸ் செய்துவிட்டது.

சென்னை இவ்வளவு குறைவாக ஸ்கோர் எடுத்ததற்கு அந்த அணியின் ஓப்பனர்கள் ரொம்பவே மோசமாக ஆடியது மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஐ.பி.எல் இல் முதல் போட்டியில் ஆடும் ஓப்பனரான டெவான் கான்வே வெறும் 3 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அதைவிட, இன்னொரு ஓப்பனரான ருத்துராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகியிருந்தார். இது ரசிகர்களை கடுமையாக அதிருப்தி அடைய செய்திருந்தது.

“அவர் அப்படித்தான்.. வெயிட் பண்ணுங்கப்பா” : ருத்துராஜின் டக் அவுட்டும் காத்திருக்கும் சம்பவங்களும் !

ஏனெனில், ருத்துராஜ் கெய்க்வாட்தான் கடந்த சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வென்றிருந்தார். அந்த சீசனில் மட்டும் 635 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணி சாம்பியன் ஆனதற்கே மிக முக்கிய காரணமாக விளங்கினார். இதனாலயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இவரை வெளியே விடாமல் அப்படியே தக்கவைத்துக் கொண்டது.

ரசிகர்கள் மத்தியிலும் ருத்துராஜூக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட வீரர் இந்த சீசனின் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் கடந்த இரண்டு சீசன்களாக வெறும் இரண்டு போட்டிகளிலேயே ஆடியிருக்கும் உமேஷ் யாதவிடம் ருத்துராஜ் தனது விக்கெட்டை விட்டிருந்தார். உமேஷ் மாறி மாறி வீசிய இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கை ருத்துராஜால் சமாளிக்கவே முடியவில்லை. ரன்கணக்கை தொடங்காமலேயே எட்ஜ் ஆகி அவுட் ஆகியிருந்தார்.

ருத்துராஜின் மீதான சென்னை ரசிகர்களின் அதிருப்தி புரிந்துக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், சென்னை ரசிகர்கள் அறிய வேண்டிய வேறு ஒரு நற்செய்தியும் இருக்கிறது.

துபாயில் நடந்த 2020 சீசனின் முதல் 3 போட்டிகளில் ருத்துராஜின் ஸ்கோர்கள் கீழே

0, 5, 0 மட்டுமே

இந்தியா மற்றும் துபாயில் நடந்த 2021 சீசனின் முதல் 3 போட்டிகளில் ருத்துராஜின் ஸ்கோர்கள் கீழே

5, 5, 10 மட்டுமே

2020 சீசனில் ருத்துராஜின் அந்த தொடக்க சொதப்பலின் போதுதான் அப்போதைய 'கேப்டன்' தோனி அவரை 'ஸ்பார்க்கே' இல்லை என விமர்சித்திருந்தார். அந்த சொதப்பலுக்கும் விமர்சனத்துக்கும் பிறகு அந்த சீசனின் கடைசி 3 போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட் ஹாட்ரிக் அரைசதம் அடித்திருப்பார். வாட்சன் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், சென்னையின் வருங்கால நிரந்த ஓப்பனர் தான்தான் என்பதை அந்த பெர்ஃபார்மென்ஸ்கள் மூலம் உறுதிப்படுத்தினார்.

“அவர் அப்படித்தான்.. வெயிட் பண்ணுங்கப்பா” : ருத்துராஜின் டக் அவுட்டும் காத்திருக்கும் சம்பவங்களும் !

அதேமாதிரி, 2021 சீசனின் தொடக்கமும் ருத்துராஜூக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. அதிலும் முதல் மூன்று போட்டிகளில் கடுமையாக சொதப்பியிருந்தார். முதல் மூன்று போட்டிகளில் ஒன்றாக சேர்த்தே 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். One Season Wonder ஆக சுருங்கிவிடுவாரோ என்ற ஐயப்பாடும் விமர்சனமும் எழுந்திருந்தது. ஆனால், அந்த சீசனில் அந்த தொடக்க சொத்தப்பல்களுக்கு பிறகுதான் வெகுண்டெழுந்து ரன்மழை பொழிந்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். சென்னை அணியையும் சாம்பியனாக்கினார். இந்த பெர்ஃபார்மென்ஸ் மூலம் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. இந்தியாவின் வருங்கால ஓப்பனரும் இவரே எனும் பேச்சுகளும் எழுந்துள்ளது.

ஐ.பி.எல் இன் தொடக்க போட்டிகளில் ருத்துராஜ் சொதப்புவது ஒரு வழக்கமாகவே தொடர்கிறது. ஒருவகையில், ருத்துராஜின் சொதப்பல்கள் பெரும் புயலுக்கு முன்பான பேரமைதி வகையை சார்ந்தவை. அதன்பிறகு, அவர் பேட் வீசப்போகும் வேகம் புயல், சுனாமி, சூறாவளி என எல்லாவற்றையும் ஏற்படுத்தும். பல சாதனைகளை உடைக்கும். அணியை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

தம்பி எம்.ஜீ.ஆர் மாதிரிலே!

மூணு அடி வாங்கிட்டுதான் திருப்பி அடிப்பாப்ல

சென்னை ரசிகர்கள் வெயிட் பண்ணுங்கப்பா!

banner

Related Stories

Related Stories