மு.க.ஸ்டாலின்

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 15 ஆய்வறிக்கைகள் மற்றும் சிறப்பு அறிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டது.  

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (10.3.2026) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட பதினைந்து ஆய்வறிக்கைகள் மற்றும் சிறப்பு அறிக்கைகளை வழங்கினார்கள்.

முதலமைச்சரின் தலைமையில் இயங்கும் மாநில திட்டக் குழு, இந்தப் பதவிக்காலத்தில் 100-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளது. மதிப்பீட்டு ஆய்வுகள், அரசு திட்டங்களின் தாக்க மதிப்பீடுகள், ஆராய்ச்சி ஆய்வுகள், துறை சார்ந்த ஆய்வுகள், கொள்கை ஆவணங்கள் மற்றும் உத்தி ஆவணங்கள் என பலவகையான ஆவணங்கள் இதில் அடங்கும். வேளாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, தொழில் மற்றும் தொழில்நுட்பம், சமூக நலன், சுகாதாரம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நீர் மேலாண்மை, வன வளம் மற்றும் உயிர்ப்பன்மை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, ஆட்சி மற்றும் நிதி என்று பல்வேறு துறைகளில் இந்த அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

மாநில திட்டக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பதினைந்து ஆய்வறிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த சிறப்பு அறிக்கைகளின் விவரங்கள்: 

1. இல்லம் தேடி கல்வி (ITK) 2.0 – தாக்க மதிப்பீடு :

இல்லம் தேடி கல்வி 2.0 திட்டத்தின் மதிப்பீட்டாய்வு, நிர்வாகத் தரவுகளின் அளவியல் பகுப்பாய்வு மற்றும் கள ஆய்வு ஆதாரங்களின் தரவியல் ஆய்வின் அடிப்படையில், இத்திட்டத்தின் அடைவு, செயலாக்கம், விளைவுத்திறன் மற்றும் கொள்கை தொடர்பைப் பரிசீலிக்கிறது. இந்த மதிப்பீடு, கிராமப்புறம், நகர்ப்புறம், நகரைச் சுற்றிய பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதி, சமூக-பொருளாதார மற்றும் புவியியல் சூழல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 மாவட்டங்களை உள்ளடக்கியது.  இந்த மதிப்பீட்டாய்வில், 79 பள்ளிகளிலிருந்தும் மற்றும் இல்லம் தேடி கல்வி 2.0-ன் பல மையங்களிலிருந்தும் 1,102 மாணவர்கள் (50.2 சதவீதம் மாணவர்கள் மற்றும் 49.8 சதவீதம் மாணவிகள்) மதிப்பீடு செய்யப்பட்டனர்.

அளவியல் மற்றும் தரவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த திட்டத்தின் மதிப்பீட்டில், இத்திட்டம் அடிப்படை கற்றல் திறன்களை வலுப்படுத்தியுள்ளதையும், பள்ளி வருகை மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்தியுள்ளதையும், கல்வி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது என்பதையும் இத்திட்டம் கூடுதல் கற்றல் தலையீடாகச் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் அறிய முடிகிறது.

இந்த திட்டம், கல்வி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கமான வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் நீண்டகால அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகும் முக்கியமான மற்றும் புதுமையான கொள்கை முயற்சியாக திகழ்கிறது.

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் (TNCF)  தாக்க மதிப்பீடு :

Tamil Nadu Champions Foundation குறித்த சுதந்திரமான விரைவு தாக்க மதிப்பீடு 2026 ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வானது, i) தரமான பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளுக்கான அணுகல், ii) செயல்திறன் முன்னேற்றம் மற்றும் போட்டித் திறன் வளர்ச்சி, iii) நிதி நிலைத்தன்மை மற்றும் விளையாட்டில் தொடர்ச்சியான பங்கேற்பு, iv) உளவியல் மற்றும் இலட்சிய மாற்றங்கள், v) மாற்றுத் திறனாளிகள் (PwD) உட்புகுத்தல், vI) நிறுவன செயல்திறன் மற்றும் விளையாட்டு சூழல் வலுப்படுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

முக்கிய கண்டறிதல்கள்

இந்த முன்னெடுப்பு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் வீரர்களையும் சென்றடைந்துள்ளது என்பதையும் 94.1% வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வாராந்திர பயிற்சி நேரம் சராசரியாக சுமார் 14% அதிகரித்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தாக்க மதிப்பீடு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை முன்னெடுப்பு, பயிற்சி அணுகல், செயல்திறன் முன்னேற்றம்,  நிதி நிலைத்தன்மை, உளவியல் முன்னேற்றம்,  அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடு மற்றும் விளையாட்டு சூழல் வலுப்படுத்தல் ஆகிய பல்வேறு பரிமாணங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும், நீண்டகால கண்காணிப்பு மற்றும் அளவீட்டு முறைகளை மேம்படுத்துவது தேவையானதாக இருந்தாலும், இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் போட்டித்திறன் வாய்ந்த விளையாட்டு சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது என்பதை கிடைத்துள்ள ஆதாரங்கள் காட்டுகின்றன. இது மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அமைப்பின் கீழ் விளையாட்டு மேம்பாட்டை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு வலுசேர்க்கிறது.

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

3. தமிழ்நாட்டின் வளமிகு வட்டாரங்களில் (Focus Blocks) அமைந்துள்ள சுகாதார நிலையங்களின் மதிப்பீடு (HFA):

தமிழ்நாடு மாநில திட்டக் குழு, வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (FBDP) கீழ் நடத்திய 'சுகாதார மையங்களின் மதிப்பீடு', கூடுதல் வளர்ச்சித் தேவைப்படும் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மற்றும் வட்டார சுகாதார நிலையங்கள் (CHCs) எந்தளவிற்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கத் தயாராக உள்ளன என்பதைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 50 வட்டாரங்களில் உள்ள 259 சுகாதார மையங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உள்கட்டமைப்பு, மனித வளம், மருந்துகளின் இருப்பு, ஆய்வகச் சேவைகள், உபகரணங்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் ஆராயப்பட்டன. தடுப்பூசி செலுத்துதல், வழக்கமான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் போன்ற அடிப்படைப் பொதுச் சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் பெரும்பாலான மையங்கள் சிறப்பாகச் செயல்படுவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

4. தமிழ்நாட்டில் உள்ள ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அரசின்  ஊட்டச்சத்து திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான கலப்பு முறையியல் ஆய்வு :

15 வளமிகு வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த கலப்பியல் ஆய்வு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் முக்கியமான ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்தும் அத்திட்டச் செயலாக்கத்தில் உள்ள  பல்வேறு அம்சங்களை  சுட்டிக்காட்டுகிறது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் அன்றாடத் தேவையில் சுமார் 30% கலோரியும் மற்றும் புரதச்சத்தில் 47% கிடைக்கிறது. தாய்மார்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும்,  முறையான மருத்துவப் பரிந்துரைகளைப் பின் தொடரவும் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது போன்ற கூடுதல் ஊட்டச்சத்து திட்டங்களை வழங்கவும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

5. இரண்டாம் நிலை சுகாதார மதிப்பீடு (SHE) :

தமிழ்நாட்டின் 40 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் நிலை சுகாதார மதிப்பீட்டு ஆய்வானது, பொதுமக்களுக்கு செலவு குறைந்த ஒரு வலுவான மருத்துவக் கட்டமைப்பாக அரசின் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் செயல்படுவதை சுட்டிக்காட்டுகிறது. 

6. தமிழ்நாட்டில் சித்த மருத்துவச் சேவைகளின் நிலை குறித்த ஆய்வு :

தமிழ்நாடு மாநில திட்டக் குழு மற்றும் ICMR-NIE இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டில் சித்த மருத்துவச் சேவைகள் குறித்த நிலை ஆய்வு', அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சையின் தன்மை மற்றும் தரத்தைத் தெரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 114 மருத்துவ மையங்கள் மற்றும் 367 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மையங்கள் தனிக் கட்டடங்களையும், சிறப்பாகப் பராமரிக்கப்படும் மூலிகைத் தோட்டங்களையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. மூட்டுவலி மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மக்கள் சித்த மருத்துவத்தை அதிகளவில் நாடுகின்றனர்; குறைந்த செலவு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத காரணத்தால் இதில் நோயாளிகள் முழுமையான மனநிறைவு அடைந்துள்ளனர். சித்த மருத்துவமுறை பொது சுகாதாரத்தின் நம்பிக்கைக்குரிய மருத்துவமுறையாக செயல்பட்டு, மாநிலம் முழுவதும் தரமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பாரம்பரியச் சிகிச்சையை வழங்குவதன் மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

7.  தமிழ்ப் புதல்வன் திட்டம் – ஓர் ஆய்வு :

தமிழ்நாடு மாநில திட்டக் குழு நடத்திய ‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்’ தாக்க மதிப்பீடு, உயர்கல்வி பயிலும் மாணவர்களிடம் இத்திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 8,278 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பயனாளிகளில் 82 சதவீதம் பேர் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், கணிசமான மாணவர்கள் தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்திட்டம் சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரைச் சென்றடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது. மாதம் வழங்கப்படும் ₹1,000 நிதியுதவி, முக்கியமாக கல்லூரி கட்டணம், புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது; இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைத்துள்ளது. படிப்பை இடையிலேயே நிறுத்தும் சூழலில் இருந்த மாணவர்களில் 90 சதவீதம் பேர், இந்த நிதி தங்களை தொடர்ந்து கல்லூரியில் பயில உதவியதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இத்திட்டம் மாணவர்களின் படிப்பிலும் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த உதவும் ஒரு முக்கிய ஆதாரமாகச் செயல்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

8. எதிர் உயிரிகளின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான மாநில அளவிலான செயல் திட்டம் :

‘ஒற்றை நலம்‘ எனும் அணுகுமுறையின் அடிப்படையில், எதிர்-உயிரி மருந்துகளுக்கு நம் உடலில் ஏற்படும் எதிர்ப்பாற்றலைக் கட்டுப்படுத்தத் தேவையான பல்துறைசார் முனைப்புகளைக் கொண்ட ஒரு விரிவான திசைவழி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களின் ஆரோக்கியம், கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Antibiotics) முறையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் முனைகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பின் 'AWaRe' வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மருந்துக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்துதல் மற்றும் ஆய்வகக் கண்காணிப்பை விரிவுபடுத்துதல் போன்றவை இதிலுள்ள முக்கிய உத்திகளாகும். 2030-ஆம் ஆண்டிற்குள், எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்துக் கண்காணிப்புத் திட்டத்தை (Stewardship program) அமல்படுத்தவும், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகள் மூலம் நேரடியாக மருந்துகள் விற்கப்படுவதை பெருமளவு குறைப்பதும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறைவாக, அத்தியாவசிய மருந்துகளின் செயல்திறனைப் பாதுகாப்பதோடு, பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

9. தமிழ்நாட்டில் இணையம் சார்ந்த கிக் (Gig)  தொழிலாளர்களின் நிலை பற்றிய ஆய்வு :

தமிழ்நாட்டில் இணையம் சார்ந்த கிக் (Gig)  தொழிலாளர்களின் நிலை பற்றிய ஆய்வு, தளப்பணியாளர்களின் தற்போதைய நிலைமைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை மதிப்பிடுவதற்கும், தொழிலாளர் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உலகளாவிய நியாயமான பணி தரநிலைகளுக்கு இணங்க கொள்கை உருவாக்குவதற்கும் வழி வகை செய்கிறது. இதற்கென, தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 255 தொழிலாளர்களிடம் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின் முக்கிய பரிந்துரைகள்:

தளப் பணியாளர்களுக்கென பிரத்யேக மாநில சமூகப் பாதுகாப்பு நிதியினை நிறுவி  (State Social Security Fund), சுகாதார காப்பீடு, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், ஊனமுற்றோர் பாதுகாப்பு, விபத்து, இறப்பு இழப்பீடு ஆகியவற்றை வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களை தளப் பணியாளர்களுக்கு திறம்பட பயன்படுத்துதல்.

தமிழ்நாடு கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Gig Workers Welfare Board) இணையதளம் மூலம் தளப் பணியாளர்கள் மற்றும் தள நிறுவனங்களின் பொதுப் பதிவு (universal registration) கட்டாயமாக்குவதோடு E-Shram UID முறையுடன் ஒருங்கிணைத்தல் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்டங்களின் பயன்களை  தடையற்ற வகையில் அணுக உதவுதல்.

செஸ் வரி வசூல் (cess collection), நிதி மேலாண்மை (fund management) மற்றும் நலத்திட்டப் பயன்கள் வழங்குதல் (welfare disbursement) ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய மைய கண்காணிப்பு முறையை (Central Transaction Monitoring System – CTIMS) செயல்படுத்துதல்.

10. தமிழ்நாடு : செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழிலாளர்கள் :

"தமிழ்நாட்டின் செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத் தொழிலாளர்கள் " என்ற அறிக்கையைத் மாநில திட்டக் குழு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவானது உற்பத்தி, ஜவுளி, மின்னணுவியல், விவசாயம், தளவாடங்கள், சுற்றுலா மற்றும் பொதுச் சேவைகள் உள்ளிட்ட மாநிலப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பதை  விவரிக்கிறது . செயற்கை நுண்ணறிவு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், குறிப்பாக வழக்கமான தொழில்துறை மற்றும் சேவைப் பணிகளில் தற்போதுள்ள பல வேலைகளின் தன்மையை மாற்றும் என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே, பணியாளர்களைத் தயார்படுத்துவதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான சூழலமைப்பை இது முன்மொழிகிறது. அதாவது பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை குழுமங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), தொழிலாளர் அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் இணைந்து தொழிலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் திறன்களை எவ்வாறு வழங்க முடியும் என்பதை  இந்த அறிக்கை  விளக்குகிறது. 

பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு இலக்குடன் கூடிய திறன் மேம்பாட்டுப்  கற்றல் பாதைகளுடன் இணைப்பதன் மூலம், தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தமிழ் நாட்டின் தொழிலாளர்கள்  தங்களை மாற்றிக்கொள்ள உதவுவதோடு, தமிழ்நாட்டின் தொழிற்துறை போட்டித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான வழிவகைகளை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது. 

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

11. தமிழ்நாடு உயிர்த் தொலைநோக்கு பார்வை  2026: தமிழ்நாடு உயிரி பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல் :

தமிழ்நாடு உயிரி பொருளாதார எதிர்காலம் வடிவமைத்தல் அறிக்கையினை தமிழ்நாடு மாநில திட்டக் குழுவில் செயல்பட்டு வரும் ஆளுகைக்கான புத்தாக்க மையம், Association of Biotechnology Led Enterprises (ABLE) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை அடித்தளம், ஆராய்ச்சி நிறுவனங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் புத்தொழில் சூழலை பயன்படுத்தி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரின அறிவியல் சூழலை வலுப்படுத்தும் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது. புத்தாக்கத்தின் வாயிலான  பொருளாதார  வளர்ச்சி  மற்றும்  உயர்தர வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கி  தமிழ்நாட்டை உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரின அறிவியல் துறையில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றிடுவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும். முக்கிய அம்சங்கள்:

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான உயிர்த் தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார தீர்வுகள், தொழில்துறை உற்பத்தி, வளங்குன்றா வேளாண் தொழில்நுட்பங்கள், கடற்சார் உயிர்த் தொழில்நுட்பங்கள் போன்ற முன்னுரிமை வளர்ச்சி பகுதிகளை அடையாளம் காண்கிறது.

உயிரித் தொழில்நுட்பத்திற்கு தேவையான ஆராய்ச்சி உட்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி திறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குகிறது.

ஆராய்ச்சி நிறுவனங்கள் தொழில்துறை,  புத்தாக்கத்தின்  வாயிலான  பொருளாதார  வளர்ச்சி  மற்றும்  சந்தைப்படுத்தலை முக்கியத்துவத்தை விளக்குகிறது

உயிரி பொருளாதாரத் துறையில் புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உயிரின அறிவியலில் உலகளாவிய போட்டித்தன்மையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை  வழங்குகிறது.

12. தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இடர் குறைப்பு மற்றும் தகவமைப்பிற்கான கட்டமைப்பு :

தமிழ்நாடு வெள்ளம், வறட்சி, சூறாவளி, வெப்ப அலை போன்ற அதிகரித்து வரும் காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறான சவால்கள் வேளாண்மை, நீர்வளங்கள், உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தை பாதிக்கின்றன. இந்த இடர்களை சமாளிக்க, மாநில திட்டக் குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியமானது, உலக வள நிறுவனம் (இந்தியா) உடன் இணைந்து, மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இடர்க் குறைப்பு மற்றும் தகவமைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு, புவியியல் தகவல் அமைப்பு (GIS) அடிப்படையிலான இடர் மற்றும் பாதிப்புகள் வரைபடம், காலநிலை முன்கணிப்புகள் மற்றும் சமூக-பொருளாதார மதிப்பீடுகள் போன்ற அறிவியல் முறைகளை பயன்படுத்தி, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய துறைகளை கண்டறிந்துள்ளது. இவ்வாய்வின் மூலம் உருவாக்கப்பட்ட மாவட்ட காலநிலை நடவடிக்கை முன்னுரிமை கருவி (DCAPT), மாவட்டங்களால் செயல்படுத்ததக்க மற்றும் பயனுள்ள தகவமைப்பு நடவடிக்கைகளைத் தேர்வு செய்ய உதவுகிறது. இந்த கட்டமைப்பு ஒருங்கிணைந்த மற்றும் சான்றுகள் அடிப்படையிலான திட்டமிடலை ஊக்குவிப்பதோடு, நிலைத்த மற்றும் மீள்திறன் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கினை அடைய உதவும்.

13. நகர்புற எல்லை பகுதிகள் (Peri-cene) தமிழ்நாடு : கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களின் எல்லை பகுதிகளில் வளர்ச்சி மேலாண்மை மற்றும் காலநிலை மாற்ற தகவமைப்பு :

“நகர்புற எல்லை பகுதிகள் (Peri-cene) தமிழ்நாடு என்ற தலைப்பில்”, மாநில திட்டக் குழுவின், தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் (TNSLURB) நிதியுதவியுடன், சென்னை ஐஐடி (IIT, Madras) நிறுவனத்தால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் வேகமாக விரிவடைந்து வரும் புறநகர் பகுதிகளை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் புறநகர் பகுதிகள், நீர்வள பாதுகாப்பு, உணவுக் கட்டமைப்பு, ஆற்றல் பயன்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் காலநிலைத் தாங்குத்திறனை தீர்மானிக்கும் ஆற்றல் வாய்ந்த இடங்களாக உள்ளன என்பதை விளக்குகிறது. இந்த அறிக்கை, புறநகர் கட்டமைப்பை அறிமுகப்படுத்தி, உலக மனித குடியிருப்பு தரவுத் தளம் (Global Human Settlement Layer (GHSL) மூலம் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள இடங்களை அடையாளம் காண உதவுகிறது.  மேலும் P-UT மின்னணு தளம் மூலம் தரவு அடிப்படையிலான திட்டமிடலை அறிமுகப்படுத்தியுள்ளது.  மேம்பட்ட மாதிரி உருவாக்க முறைகள் மூலம், ஒருங்கிணைந்த ஆளுகை ஏற்பட்டு, காலநிலை மற்றும் வள இடர்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என்பதையும், இவ்விரு நகரங்களை தமிழ்நாட்டில் நிலைத்தன்மை கொண்ட புறநகர் மேலாண்மைக்கான முன்னோடி மாதிரிகளாக நிலைநிறுத்தவும் இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. 

இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?

14. தமிழ்நாட்டின் புனித தோப்புக்காடுகள் – காட்சிப்பட நூல் :

தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம், “தமிழ்நாட்டின் புனித தோப்புக்காடுகள்”  என்ற தலைப்பில், இம்மாநிலதின் சமூகம் சார்ந்த பாதுகாப்பு மரபை போற்றும் ஒரு காட்சிப்பட நூலை வெளியிட்டுள்ளது.   இவ்வாரியம் வனத்துறையுடன் இணைந்து,  'தமிழ்நாட்டின் புனித தோப்புக்காடுகளுக்கான புவிசார் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும் உயிரிப்பல்வகைமையை ஆவணப்படுத்துதல்'   என்ற தலைப்பில் 2021 முதல் 2025 வரை மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல், சுமார் 1,017.76 ஏக்கர் பரப்பளவில் 1,025 புனிதத் தோப்புகள் பரவியுள்ளதாகவும், அவற்றுள் 82 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, சமூக பொறுப்பிலேயே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. இந்நூல், காலநிலை மீள்தன்மை, சூழலியல் பாதுகாக்கும் திறன் மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சி ஆகியவற்றில் புனித தோப்புக்காடுகளின் முக்கிய பங்கினை எடுத்துரைக்கிறது. தமிழ்நாடு அரசு புனித தோப்புக்காடுகளின் சட்டபூர்வ பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகப் பாதுகாப்பு பொறுப்பினை வலுப்படுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில புனித தோப்புக்காடுகளை, 'பாரம்பரிய உயிரிப்பல்வகைமை தலங்கள்' போன்ற முறையான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

15.  நகர்ப்புற தமிழ்நாட்டில் உயிரியக்கக் கழிவு மேலாண்மை :

மாநில திட்டக் குழுவின் தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியமானது, "லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (LSE)ன் நகரங்கள் (Cities)  பிரிவின் கீழ் ஒரு கூட்டு ஆய்வினை மேற்கொண்டு “நகர்ப்புற தமிழ்நாட்டின் உயிரிக் கழிவு மேலாண்மை : கருப்பு படைவீரர் ஈக்கள் (Black Soldier Fly) மூலம் உயிரிமாற்றம் – முன்னோடி தமிழ்நாடு” என்ற விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, கருப்பு படைவீரர் ஈ' (Black Soldier Fly) உயிரிமாற்ற தொழில்நுட்பத்தை, பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக ஒரு திறன்வாய்ந்த மற்றும் காலநிலை மீள்தன்மை கொண்ட தீர்வாக முன்னிலைப்படுத்துகிறது. 

இந்தத் தொழில்நுட்பம், உயிரிக் கழிவுகளைக் குறைந்த காலத்தில் உயர் மதிப்புள்ள புரதமாகவும், உரமாகவும் மாற்றும் திறனுடனும், குறைந்த நிலப்பரப்பு, மூலதனச் செலவு மற்றும் பூஜ்ஜிய-நிலை மீத்தேன் வாயு உமிழ்வு போன்ற குறிப்பிடத்தக்க நன்மைகளையும் கொண்டுள்ளது.  மேலும், இந்த தொழில்நுட்பத்தை படிப்படியாக செயலாக்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சிகளில் முன்னோடித் திட்டமாக தொடங்கி, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.  இந்த முன்னெடுப்பானது, தமிழ்நாட்டின் 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கோடு ஒத்துப்போகும் வகையில், நகர்ப்புறக் கழிவுகளை உற்பத்தித் திறன் கொண்ட கழிவிலிருந்து வளம் உருவாக்கும் பொருளாதாரமாக (waste-to-resource economy) மாற்றி, நிலையான கழிவு மேலாண்மையில் இம்மாநிலதை ஒரு தேசிய அளவிலான முன்மாதிரியாக நிலைநாட்ட வழிவகுக்கும்.  

banner

Related Stories

Related Stories