விளையாட்டு

ODI கிரிக்கெட் அரங்கில் இந்திய வீராங்கனை புதிய சாதனை: ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

ODI கிரிக்கெட் அரங்கில் இந்திய வீராங்கனை புதிய சாதனை: ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூசிலாந்தில் மகளிருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்திய அணியின் மூத்த வீராங்கனையும், பந்து வீச்சாளருமான ஜூலன் கோஸ்வாமி இந்த போட்டியின் மூலம் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார்.

இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 போட்டியில் விளையாடிய இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

முன்னதாக, 39 வயதான கோஸ்வாமி, நடப்பு உலகக்கோப்பை தொடரின் மூலம் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் இந்த சாதனையை படைத்திருந்தார்.

போட்டிக்குப் பிறகு ஜுலன் கோஸ்வாமியின் இந்த சாதனையை இந்திய அணியினர் ஒட்டுமொத்தமாக கொண்டாடினர். அணியின் வீராங்கனைகள் அனைவரும் மைதானத்திலிருந்து கோஸ்வாமிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, 200 என்ற எண் பதித்த தொப்பியையும் வழங்கி சக அணி வீராங்கனைகள் மகிழ்ந்தனர்.

இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் கோஸ்வாமிக்கு, இது ஐந்தாவது உலக கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories