விளையாட்டு

T20 தொடரிலும் முழுமையான வெற்றி..! - வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை முழுமையாக ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

T20 தொடரிலும் முழுமையான வெற்றி..! - வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் இந்த டி20 தொடரையும் 3-0 என முழுமையாக வென்றிருக்கிறது. இதற்கு முன் நடந்த ஓடிஐ தொடரையும் 3-0 என வென்றிருந்தது. இதன் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை முழுமையாக ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியே டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் என பென்ச்சில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கமாக இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் இஷான் கிஷனுமே ஓப்பனிங் இறங்குவார்கள். ஆனால், ருத்துராஜுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு நேற்று ரோஹித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஆர்டரை இறக்கி கொண்டார். ருத்துராஜூம் இஷான் கிஷனும் ஓப்பனிங் இறங்க ரோஹித் நம்பர் 4 வீரராக களமிறங்கினார்.

புதிய கூட்டணியாக களமிறங்கிய ருத்துராஜ்-இஷான் கிஷன் கூட்டணி பெரிதாக சோபிக்கவில்லை. சீக்கிரமே அவுட் ஆகி வெளியேறியிருந்தனர். மிடில் ஓவர்களில் ரோஹித் சர்மாவாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. 15 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்த ரோஹித் சர்மா ட்ரேக்ஸின் பந்தில் போல்டாகி வெளியேறினார். 16 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வால்ஸின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்திய அணி 15 ஓவர்களில் 98 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

T20 தொடரிலும் முழுமையான வெற்றி..! - வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த இந்தியா!

இந்நிலையில்தான் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கூட்டணி சேர்ந்தனர். இவர்கள் அதிரடி சரவெடியாக வெளுத்தனர். இதனால் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 86 ரன்கள் வந்திருந்தது. குறிப்பாக, ட்ரேக்ஸ் மற்றும் ஷெப்பர்ட் வீசிய கடைசி 2 ஓவர்களில் மட்டும் 42 ரன்களை எடுத்திருந்தனர். ட்ரேக்ஸின் 19 வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை அடிக்க, ஷெப்பர்ட் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்சர்களை அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை எடுத்தது. சூர்யகுமார் 31 பந்துகளில் 65 ரன்களையும் வெங்கடேஷ் 19 பந்துகளில் 35 ரன்களையும் அடித்திருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் ஆறுதல் வெற்றியை பெற 185 ரன்கள் இலக்கு. பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் 68 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து ரன்ரேட்டை 10 க்கு மேலேயே மெயிண்டெயின் செய்தது. இந்நிலையில்தான் 7-15 இந்த மிடில் ஓவர்களில் இந்திய அணி சிறப்பாக வீசி ஆட்டத்திற்குள் வந்தது. குறிப்பாக, வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் இந்த மிடில் ஓவர்களில் 4 ஓவர்களை வீசியிருந்தனர்.

இந்த 4 ஓவர்களிலுமே விக்கெட் விழுந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸின் முக்கியமான 4 பேட்ஸ்மேன்களும் காலி. ரோவன் பவல் மற்றும் சேஸை ஹர்ஷல் படேல் தனது ஸ்லோயர் வேரியேஷன்கள் மூலம் வீழ்த்த, பொல்லார்ட் மற்றும் ஹோல்டரை வெங்கடேஷ் ஐயர் வீழ்த்தியிருந்தார். முக்கியமான விக்கெட்டுகள் அத்தனையும் வீழ்ந்த போதும் நிக்கோலஸ் பூரன் மற்றும் நின்று அரைசதம் அடித்தார்.

இந்த தொடரில் தொடர்ச்சியாக அவர் அடிக்கு மூன்றாவது அரைசதம் இது. ஆனால், அவராலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்ற முடியவில்லை. 61 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் பூரன் அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடரை முழுமையாக 3-0 என இந்தியா வென்றது. டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories