விளையாட்டு

சிறந்த வீராங்கனை விருது பெற்ற ஸ்மிரிதி மந்தனா.. I.C.C விருதுகள் பட்டியல் இதோ!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா பெற்றிருக்கிறார்.

சிறந்த வீராங்கனை விருது பெற்ற ஸ்மிரிதி மந்தனா.. I.C.C விருதுகள் பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா பெற்றிருக்கிறார். 2018-ம் ஆண்டு இவ்விருதை வென்ற ஸ்மிரிதி, இரண்டாவது முறையாக மீண்டும் அதைப் பெற்றிருக்கிறார்.

ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொடுக்கும் ஐ.சி.சி விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுகளில், முதலில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க ஓப்பனர் யாலமான் மலான் இவ்விருதை வென்றார். பெண்கள் பிரிவில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஃபாதிமா சனாவுக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது. சிறந்த டி-20 வீராங்கனைக்கான விருது இங்கிலாந்து ஓப்பனர் டேமி போமான்ட்டுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சிறந்த வீரர் வீராங்கனைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பிரிவில் இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா சிறந்த வீராங்கனை விருதை வென்றார். டெஸ்ட், ஒருநாள், டி-20 என சர்வதேச போட்டிகளின் அனைத்து ஃபார்மட்களிலும் பட்டையைக் கிளப்பினார் ஸ்மிரிதி. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என எல்லா ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடினார்.

அதுமட்டுமல்லாமல், பிக் பேஷ் லீகிலும் நன்றாக விளையாடினார். அங்கு சதம் விளாசி, பெண்கள் பிக் பேஷ் தொடரின் டாப் ஸ்கோரையும் சமன் செய்தார். அனைத்து ஏரியாவிலும் கலக்கியதால் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் 2018-ம் ஆண்டு சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிரிதி வென்றிருந்தார். இவ்விருதை இரண்டு முறை வாங்கும் இரண்டாவது வீராங்கனை இவர்தான்!

ஆண்கள் பிரிவில்சர் கேரி சோபர்ஸ் விருதை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி வென்றார். வெறும் 21 வயதேயான அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உருவெடுத்துவருகிறார். தன் அச்சுறுத்தும் வேகத்தாலும், அசத்தல் யார்க்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடவைக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பையில் தன் முதல் ஸ்பெல்லிலேயே ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திரும்பியிருந்தார் ஷஹீன் அப்ரிடி. இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பது அவருக்கு கூடுதல் சாதகமாக இருக்கிறது. ரோஹித், கோலி, ஸ்மித் என உலகின் மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் கூட இவர் பந்துவீச்சுக்கு எதிராக பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

பேட்டிங்கில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் போன்றவர்கள் பாகிஸ்தானை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்க, பந்துவீச்சில் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார் ஷஹீன். இந்த விருதுக்கு மட்டுமல்ல, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கும் இவர் பெயர் பரிந்துரையில் இருக்கிறது.

சிறந்த நடுவருக்கான விருது தென்னாப்பிரிக்காவின் மராய் எராஸ்மஸுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் இவ்விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை.

banner

Related Stories

Related Stories