விளையாட்டு

2 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி... சதமின்றி நிறைவு பெறும் 2021!

இதோடு கோலி சதமடித்து 60 இன்னிங்ஸ்களை தாண்டிவிட்டது. கோலியின் கரியரில் அவர் இத்தனை போட்டிகளாக சதமடிக்காமல் இருந்ததில்லை.

2 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி... சதமின்றி நிறைவு பெறும் 2021!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்ச்சூரியனில் நடைபெற்று வரும் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடிக்க தவறியிருக்கிறார். இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான் என்பதால் இந்த ஆண்டை சதமற்ற ஆண்டாக கோலி நிறைவு செய்திருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டிலுமே கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2019ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சதமடித்திருந்தார். அது சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 70வது சதமாக பதிவாகியிருந்தது. இந்த சதத்திற்கு பிறகு இப்போது வரை விராட் கோலி ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. டெஸ்ட் போட்டிகள் என்றில்லை. ODI, டி20, ஐ.பி.எல் என எங்கேயும் கோலி ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 71வது சதத்திற்காக ரசிகர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்த சமயத்தில்தான் கடந்த சில வாரங்களாக கோலியின் கரியரில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளெல்லாம் அரங்கேறியது. டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலியே விலகிய நிலையில் ODI போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ கோலியை அதிரடியாக நீக்கியது. இதை தொடர்ந்து பிசிசிஐ-க்கும் தனக்கும் நிகழ்ந்த அசௌகரியங்கள் குறித்து கோலி வெளிப்படையாகவே பேசியிருந்தார். பிசிசிஐ தலைவரான கங்குலியை நேரடியாக குற்றம்சாட்டும் வகையில் கோலியின் பேச்சு அமைந்திருந்தது.

விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதை விட அவர் நீக்கப்பட்ட விதமே ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தியது. ரொம்பவே தாமதமாகத்தான் பிசிசிஐ விராட் கோலிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தது. இதுவே கோலிக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அவமானமாக ரசிகர்கள் கருதினர்.

வீழ்ச்சியிலிருந்த கோலி இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வெறித்தனமாக ஆடி தன் மீதிருந்த விமர்சனங்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானங்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அடி வாங்கி அடி வாங்கி வாங்கியவற்றை திருப்பி கொடுக்க தயாராகும் மாஸ் ஹீரோவுக்கு உருவாக்கப்படும் பில்டப்பே கோலிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் கடுமையாக சொதப்பியிருக்கவே செய்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 94 பந்துகளில் 35 ரன்களை எடுத்த கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 32 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்து அவுட் ஆகியிருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த கோலிக்கு தேவைப்பட்ட அந்த ஒரு சதம் இந்தப் போட்டியிலும் அடிக்கப்படவில்லை.

இந்த இரண்டு இன்னிங்ஸிலுமே கோலி நன்றாகவே தொடங்கியிருந்தார். நன்றாக டிஃபன்ஸ் ஆடினார். கட்டுக்கோப்பாக அட்டாக் செய்தார். ஆனால், அதை தொடர்ச்சியாகச் செய்யவில்லை. மிகவும் மோசமான முறையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடாக சென்ற பந்துகளை துரத்திச் சென்று கவர் ட்ரைவ் ஆட முயன்று கேட்ச் ஆனார். இரண்டு இன்னிங்ஸிலுமே இப்படி நிதானமற்ற முறையிலேயே ஆட்டமிழந்தார்.

2 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி... சதமின்றி நிறைவு பெறும் 2021!

'கோலியிடமிருந்து இப்படி ஒரு ஷாட்டை எதிர்பார்க்கவே இல்லை. முதல் இன்னிங்ஸிலும் இப்படித்தான் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் பந்திலேயே அப்படி ஒரு ஷாட்டை ஏன் ஆட வேண்டும்?' என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கோலியை கமெண்ட்ரி பாக்ஸில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

2014ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது ஆண்டர்சனுக்கு எதிராகவும் கோலி இப்படித்தான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு தொடர்ச்சியாக அவுட் ஆனார். 2018இல் மீண்டும் இங்கிலாந்துக்கு சென்ற போது 2014 இல் செய்த தவறை திருத்திக் கொண்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அதிகமாக பேட்டை விடாமல் நிதானமாக ஆடி சாதித்தார். இப்போது தென்னாப்பிரிக்க தொடரில் பழையபடியே 2014 தொடரில் கோலி என்ன செய்தாரோ அதையே செய்து கொண்டிருக்கிறார்.

இதோடு கோலி சதமடித்து 60 இன்னிங்ஸ்களை தாண்டிவிட்டது. கோலியின் கரியரில் அவர் இத்தனை போட்டிகளாக சதமடிக்காமல் இருந்ததில்லை. இதுதான் ரசிகர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. 2022ஆம் ஆண்டையாவது கோலி சதத்தோடு தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்!

banner

Related Stories

Related Stories